இன்று நடக்க இருந்த தமிழக சட்டசபை கூட்டம்
ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலகம் வெளியிட்டது.
இன்று முழு அடைப்பு
கர்நாடக அரசின் மேகதாது திட்டம் உள்பட தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தலையிட்டு தடுக் கக்கோரி தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் அரசினர் தனித்
தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இன்று முழு அடைப்பு
கர்நாடக அரசின் மேகதாது திட்டம் உள்பட தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தலையிட்டு தடுக் கக்கோரி தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சர் தலைமையில் டெல்லிக்கு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் சென்று, அங்கு பாராளுமன்றத்தின் முன்பு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தி.மு.க. கருத்து
தி.மு.க. தரப்பில் பேசிய துரைமுருகன், ‘‘ஒரு அரசு முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால் அது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது. ஆனால் அ.தி.மு.க. பங்கேற்கலாம். 28-ந்தேதி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் நாம் காரில் போய்க் கொண்டிருப்பது நியாயமாக இருக்காது. எனவே அவையை அந்த ஒரு நாள் மட்டும் ஒத்திவைக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை மானசீகமாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் 28-ந்தேதி அவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அது விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்த மாமன்றம் காட்டுகின்ற மரியாதை’’ என்றார்.
சட்டசபை ஒத்திவைப்பு
சட்டசபையில் நேற்றைய நிகழ்வுகள் பிற்பகலில் முடிந்ததும் சபாநாயகர் ப.தனபால், ‘‘பேரவை மறுநாள் (28-ந்தேதி) காலை 10 மணிக்கு கூடும்’’ என்று அறிவித்தார். இந்த நிலையில் சட்டசபை செயலாளார் அ.மு.பி.ஜமாலுதீன் அறிவிப்பு ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவரிடம் தெரிவித்த கருத்திற்கிணங்க, பேரவை விதி 26(2)-ன் கீழ், 28-3-15 (இன்று) நடைபெறுவதாக இருந்த கூட்டத்தை ஒத்திவைத்து, அன்றையதினம் எடுத்துக்கொள்வதாக இருந்த அலுவல்கள் 30-3-2015 அன்று எடுத்துக் கொள்ளப்படும்.
30-3-15 மற்றும் 31-3-15 ஆகிய நாட்களில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அலுவல்கள் முறையே 31-3-15 மற்றும் 1-4-15 ஆகிய நாட்களில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த பேரவை கூட்டம் 30-3-15 அன்று காலை 10 மணிக்கு கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்கள் அறிவிப்பு
முன்னதாக நேற்று சட்டசபை கூட்டம் முடிந்து வெளியே வந்த தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்கள், முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, இன்று (சனிக்கிழமை) பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொள்ளப்போவது இல்லை என தெரிவித்தனர். சட்டசபை கூட்டம் முடிந்து வெளியே வந்த சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்; முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (இன்று) நடக்கும் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்றார்.
பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் கூறும்போது, ‘முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாங்கள் சட்டமன்ற நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டோம்’ என்றார்.
இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று நடக்க இருக்கும் பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தனர்.
தமிழக சட்டசபை விவாத நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று சட்டமன்ற குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.