இந்திய மருத்துவக் கவுன்சில்
குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியின்
அங்கீகாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. அதே நேரத்தில், மாணவர்கள் சேர்க்கை
150-இல் இருந்து 250-ஆக அதிகரிக்க வாய்ப்பில்லை.
கோவை அவிநாசி சாலை பீளமேட்டில் கோவை அரசு மருத்துவக்
கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு
கல்வியாண்டிலும் எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவில் 150 மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின்
மாணவர் சேர்க்கையை 150-லிருந்து 250-ஆக அதிகரிக்கக் கோரி இந்திய மருத்துவ
கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.) கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
இதையடுத்து, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கட்டமைப்பு வசதிகள்
குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் கடந்த ஜனவரி 9, 10
ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு நடத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள
கட்டமைப்பு வசதி குறைபாடு குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.
அதாவது, பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து ஆய்வுக் குழுவினர் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்பு வசதி
குறித்து இந்திய மருத்துவக் குழு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள
குறைகள் குறித்து தில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம்
(எம்.சி.ஐ.) நேரில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில குறைபாடுகளைப் போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கவுன்சிலிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே, கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது. அதே
நேரத்தில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 150-லிருந்து 250-ஆக அதிகரிக்க
வாய்ப்பில்லை.
மேலும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 250-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.








