விடைத்தாள் திருத்தும் பணி என்பது எளிதானதல்ல. ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல், 'டம்மி நம்பர்' வழங்குதல், விடைத்தாள் திருத்தும் முகாம் மையங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் உள்ளன. இப்பணிகள் அனைத்தும் அருகிலிருந்து அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம். தேர்வு நடக்கும் சமயத்தில், தேர்வுப் பணிகளை கண்காணிப்பதா அல்லது விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிப்பதா என்ற சிக்கல் எழுந்துள்ளது.
சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அதிகப்படியான, பணிச் சுமைகளை திணித்துவிட்டு, முறைகேடுகள் நடந்தால், அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்களை வாட்டுவது ஏற்புடையதல்ல. 'பயிற்சி பெற்ற, பறக்கும்படை உறுப்பினர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிக்கு, இவர்களை விடுவித்து, புதிய ஆசிரியர்களை நியமித்தால், அதிக சிக்கல் ஏற்படும். விடைத்தாள் திருத்தும் பணியை தேர்வுக்கு பின்பே துவங்கவேண்டும்' என்றார்.
குளறுபடிக்கு வாய்ப்பு
ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைநிலை ஆசிரியர்கள் முதல் முதன்மை கல்வி அதிகாரி வரை அனைவரும் தேர்வு பணியில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு அதிகப்படியான பணிச்சுமைகள் உள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளை துவக்கினால், கல்வி அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபடமுடியாமல், பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கவேண்டிய சூழல் உருவாகும். போதிய அனுபவம் இல்லாத பொறுப்பு அதிகாரிகளால், விடைத்தாள் திருத்தும் பணிகளில், குளறுபடிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.








