தமிழகத்தில் சனிக்கிழமை (இன்று)
முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள
நிலையில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என வணிகர்
சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பேருந்துகள்,ரயில்கள் வழக்கம்போல
இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின்
முயற்சியைக் கண்டித்து தமிழகத்தில் சனிக்கிழமை முழு அடைப்புப்
போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு
விடுத்துள்ளது.
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ்,
தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும்
தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என வணிகர் சங்கங்கள்
அறிவித்துள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்துள்ளதால் ஆட்டோ, லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் இயக்கப்படாது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்துக்
கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம்
நடத்தப்பட்டாலும் கூட, அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்றனர்
அவர்கள். இதுபோல் ரயில்களை வழக்கம்போல இயக்க தென்னக ரயில்வே அனைத்து
ஏற்பாடுகளையும் செய்துள்ளது.