மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து கேட்டுக் கொண்டார்.
எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா இஞ்ஜினீயரிங்
கல்லூரியில் மின்னணுவியல், தொலைத் தொடர்பியல், கணிப்பொறித் துறை சார்பில்
"கணிப்பொறியின் சமீபத்திய போக்குகள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு
சனிக்கிழமை நடைபெற்றது.
தாளாளர் எம்.மணி தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார்.
ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து
பங்கேற்றுப் பேசியது: இன்றைய கால கட்டத்தில் தகவல் தொடர்பு என்பது
இன்றியமையாதது. எந்த ஒரு தகவலும் உடனடியாகச் சென்றடைய அதற்கேற்ற
தொழில்நுட்பம் அவசியம். இத் தொழில்நுட்பத்தில், தற்போதைய புதுமைகள்
மெய்சிலிர்க்க வைக்கின்றன. மாணவர்கள் உங்கள் துறைகளில் புதிய
கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். உங்கள் அறிவையும், பொறியியல்
திறமைகளையும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.அதற்கான பயிற்சிப் பட்டறைகள்,
கருத்தரங்குகள், கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்று அறிவுத்
திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில், பொறியியல்
திறன் என்பது நம் முன்னேற்றத்துக்கு முதல்படியாகும். மாணவர்கள் ஒரு கூற்றை
பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டும். நம் நாட்டுக்கு பொறியியல் மற்றும்
தகவல் தொடர்பு சம்பந்தமான அறிவை அர்ப்பணித்து, அனைத்துத் துறைகளிலும்
முதலிடம் அடைய சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றார் நெல்லை
சு.முத்து.