பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இங்கிலாந்து செயற்கை கோள் ஜூன் மாதம்
விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்து இருப்பதாக இஸ்ரோ அதிகாரி தெரிவித்தார்.
பேட்டி
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில்
இருந்து பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–டி
செயற்கை கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது, இந்திய
விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் கடந்த ஜனவரி
மாதம் பொறுப்பு ஏற்ற பிறகு அனுப்பப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். ராக்கெட்
வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர் ஏ.எஸ்.கிரண்குமார் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ரூ.6 ஆயிரம் கோடி நிதி
கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை அனுப்ப
திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது 4–வது ராக்கெட் திட்டமிட்டப்படி விண்ணில்
செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக 4 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.
செயற்கைகோள்களை விண்ணில் நிலை நிறுத்தினால்தான் ஜி.பி.எஸ். என்ற நவீன
வசதியை நாம் முழுமையாக பெறமுடியும்.
இதன்மூலம் இந்தியா மட்டும்
அல்லாமல் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 1,500 கி.மீ. பகுதிகளை
கண்காணிக்கமுடியும். மத்திய அரசு நடப்பாண்டு இஸ்ரோவின் செயல்
திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன்மூலம் 2016–ம்
ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1 இ, 1 எப், 1 ஜி
மற்றும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–2, ஜிசாட்–6, ஆஸ்ட்ரோசாட் ராக்கெட்டுகளை
விண்ணில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து செயற்கை கோள்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–டி திட்ட இயக்குனர் குன்னில் கிருஷ்ணன்
கூறுகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–டி செயற்கை கோள் வெற்றிகரமாக பூமியின்
சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அடுத்ததாக வருகிற
ஜூன் மாதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டின் செயற்கை
கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த இருப்பதாக கூறினார்.
சதீஷ் தவான்
விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் கூறும்போது, ஸ்ரீஹரிகோட்டாவில்
3–வது ஏவுதளம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் ஆய்வறிக்கை
இஸ்ரோ தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடங்க இருக்கின்ற பணி
அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவுபெறும் என்றார்