தேர்வு பகல் 1-15 மணிக்கு முடிந்து மாணவ-மாணவிகள் வெளியே வந்தனர். அவர்களிடம் தேர்வு எப்படி இருந்தது? என்று கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
உயிரியியல் தேர்வில் தாவரவியல், விலங்கியல் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஒரே வினாத்தாளில் இருக்கும். அதன்படி தான் இந்த வருடமும் கேள்வித்தாளில் இருந்தன. கேள்விகளை வாசிக்கத் தொடங்கியதும் விலங்கியல் வினாக்கள் கடினமாக இருந்தன. புரியாத புதிராக இருந்தது.
கேள்விகள் நேரடியாக கேட்கப்படவில்லை. சுற்றி வளைத்து மறைமுகமாக கேட்கப்பட்டுள்ளன. விலங்கியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தன. 3 மதிப்பெண் கேள்விகளில் 18, 21, 23, 27 ஆகிய கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் புத்தகத்தின் பின் பக்கத்தில் இருந்து கேட்காமல் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. நன்றாக பாடத்தை முழுமையாக படித்திருந்தால் தெரியும். மேலும் 36, 67 ஆகிய கேள்விகள் 10 மதிப்பெண் கேள்விகள் ஆகும். அவை இரண்டும் மிகக்கடினமாக இருந்தன. பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருக்கின்றன. 5 மதிப்பெண் கேள்விகள் மட்டும் எளிதாக இருந்தன.
தாவரவியல் எளிதாக இருந்தது
தாவரவியல் கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தன. அனைத்து கேள்விகளும் பாடத்தின் பின் பக்கத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருந்தன.
விலங்கியல் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததால் 200-க்கு 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மருத்துவ கட் ஆப் மதிப்பெண்ணும் குறையவாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
வர்த்தக கணிதம், வரலாறு ஆகிய பாடத்தேர்வுகளும் நேற்று நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு முடிந்தது
நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு முடிந்தது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வினாத்தாள்களை உயரே போட்டு பிடித்தனர். மாணவிகள் தங்கள் வகுப்புத்தோழிகளை இனிமேல் பார்ப்பது எளிது அல்ல என்ற நினைப்பில் அவர்களை செல்போனில் படம் எடுத்துக்கொண்டனர். சிலர் பிரிவை நினைத்து கண்கலங்கி விட்டனர்.








