மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய
அடையாள அட்டை பெறுவதற்கு 36 ரெயில் நிலையங்களில் விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகள் ஆன்–லைன் மற்றும் டிக்கெட் கவுண்ட்டர்களில்
சலுகை பயண டிக்கெட் எடுத்து பயணிப்பதற்கு வசதியாக ரெயில்வே புகைப்படத்துடன்
கூடிய அடையாள அட்டை வழங்க உள்ளது. இந்த அடையாள அட்டையை சென்னை, திருச்சி,
மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய கோட்ட
அலுவலகங்களுக்கு தகுதியான ஆவணங்களை சமர்ப்பித்து பெறலாம்.
புகைப்பட
அடையாள அட்டையை பெற விரும்புபவர்களுக்கு வசதியாக தெற்கு ரெயில்வே கூடுதலாக
36 கூடுதல் இடங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதியை
ஏற்படுத்தியுள்ளது.
36 ரெயில் நிலையங்களில்...
இதன்படி ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, உதகமண்டலம், திண்டுக்கல்,
விருதுநகர், மானாமதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம்,
கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில்,
அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி,
புதுச்சேரி உள்பட 36 ரெயில் நிலையங்களில் மே மாதம் 1–ந் தேதி முதல் 2 மாத
காலத்துக்கு வார நாட்களில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைதோறும்
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
எஸ்.எம்.எஸ். தகவல்
2 மாத காலத்துக்கு பின்னர் கோட்ட அலுவலகங்களில் மட்டுமே
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பம்
சமர்ப்பித்த இடத்திலேயே புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சம்பந்தப்பட்ட
நபரிடம் வழங்கப்படும்.
விண்ணப்பத்தில் செல்போன் எண் தெரிவித்தவர்கள் 3
வாரங்கள் ஆகியும் புகைப்பட அடையாள அட்டையை வாங்கவில்லையென்றால் அடையாள
அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.