வெயில் காலத்தில் தண்ணீர்
தமிழ்நாட்டில் ஏப்ரல் , மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெயிலின் தன்மை அதிகமாக இருக்கும். மனிதர்கள் கோடை வெயிலை குளிர்பானங்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை குடித்து சமாளித்து விடுவார்கள். ஆனால் காடுகளில் திரியும் மாடுகள், மான்கள், குரங்குகள், உள்ளிட்ட விலங்குகள், மற்றும் பறவைகள் தண்ணீருக்காக பல இடங்களில் தேடி அலையும்.
அதன்படி சென்னை கிண்டி அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீர் சட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கிண்ணம் போன்ற சட்டிகள் வைக்கப்பட்டன. அவற்றில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தண்ணீர் ஊற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் எஸ்.கணேசன், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் டீன் சிவநேசன், பேராசிரியர் வி.கே.ஸ்டாலின், இந்திய கால்நடைகள் நல வாரிய துணை தலைவர் டாக்டர் சின்னி கிருஷ்ணா, இந்திய புளுகிராஸ் அமைப்பின் பொதுமேலாளர் டாண் வில்லியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது:-
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை
அண்ணாபல்கலைக்கழக வளாகத்திற்கு மான்கள், குரங்குகள், நரிகள் உள்ளிட்ட விலங்குகள், மயில்கள், புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் தினமும் வந்து செல்கின்றன. அவை தாகம் தீர தண்ணீர் குடிப்பதற்கு புளுகிராஸ் அமைப்பு சார்பில் தண்ணீர் சட்டிகள் வைத்து உள்ளனர். இது ஒரு நல்ல சேவை. முதல் கட்டமாக அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் இந்த தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தசேவை அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் நீட்டிக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும். எத்தனை இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதை 30-ந்தேதி முடிவு செய்யப்படும். கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.








