சமமான உரிமை
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:–
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது நோக்கமான
அனைவருக்கம் சமமான உரிமை வழங்குவோம் என அனைவரும் சபதம் ஏற்போம்.
ஆதிதிராவிட மக்கள் நலனில் அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதில்லை.
மாணவர்களின்
எதிர்காலத்திலும் அக்கறை செலுத்துவதில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2014–15–ம்
கல்வி ஆண்டில் அனைத்து படிப்புகளிலும் கல்வி பயிலும் சுமார் 6½ லட்சம்
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.
கல்வி உதவித்தொகை
இவர்களில் பொறியியல் படிக்கும் 1½ லட்சம் மாணவர்களுக்கு தேர்வு எழுத
முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இந்த கல்வியாண்டில் உதவித்தொகையாக
ரூ.1,100 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ரூ.140 கோடி
மட்டுமே வழங்கியுள்ளது.
இந்த காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசு
அதிகாரிகள், ‘‘மத்திய அரசிடம் இருந்து மீதித்தொகை வந்த உடன் கல்வி
உதவித்தொகை செலுத்தப்படும்’’ என்று கூறி வருகிறார்கள். இதனால் மாணவர்கள்
செமஸ்டர் தேர்வு எழுத முடியாத ஆபத்தான சூழ்நிலை உருவாகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
அரசு மெத்தனம்
இதே போன்றதொரு நிலைமை 2013–14 கல்வியாண்டில் ஏற்பட்டு பல மாணவர்கள்
தேர்வு எழுத முடியாமல் இடை விலகல் ஆகியுள்ளனர். அதைக் கூட மனதில் கொள்ளாமல்
இந்த வருடமும் அதே பிரச்சினை உருவாக விட்டு விட்டு அ.தி.மு.க. அரசு
மெத்தனமாக இருக்கிறது.
ஆகவே ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகையை உடனே மாநில அரசு செலுத்தி, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில்
படிக்கும் ஆதி திராவிட மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுத நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த இந்த நாளில் தி.மு.க.
சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.







