சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை
நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய
கம்யூனிஸட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர்
வலியுறுத்தினர்.
ராமதாஸ்: சத்துணவுப் பணியாளர்கள் தங்களை முழுநேர அரசு
ஊழியராக்க வேண்டும். பணி நிரந்தரம், ஓய்வூதியம், ஊதிய உயர்வு வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட 34 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற
வேலைநிறுத்தம் நடத்துகின்றனர்.
எந்த நேரமும் உயிர் பறிக்கப்படலாம் என்ற பதற்றத்துடன்
வாழ்வது எவ்வளவு கொடுமையானதோ, அதைவிடக் கொடுமையானது எந்த நேரம் வேலை
பறிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் நிச்சயமற்ற நிலையில் ஒரு வேலையை செய்வது
ஆகும்.
இந்தக் கொடுமையைத் தான் தமிழகத்திலுள்ள சத்துணவு
பணியாளர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். அவர்கள்
முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. இப்போதும் கூட சத்துணவுப்
பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களை பணி நீக்கம்
செய்யப்போவதாக தமிழக அரசு எச்சரிப்பது அதன் சர்வாதிகாரப் போக்கையே
காட்டுகிறது.
இரா.முத்தரசன்: சத்துணவு ஊழியர்கள் தங்களின் மிக நியாயமான கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை துவக்கி உள்ளனர்.
எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்ட இச்சிறந்த திட்டத்தில்
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர்.
இவர்கள் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஆதரிக்கிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சத்துணவு
ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.








