செயற்கைக்கோள் அறிமுகமான 1950–களில் அது ஒரு மாபெரும் சாதனையாகக் கருதப்பட்டது. அப்போது ரஷ்யாதான் விண்வெளி ஆய்வில் முன்னோடி. அதுதான் விண்வெளிக்கு ஆட்களையும் செயற்கைக்கோள்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தது. ரஷ்யா 1957–ல் அனுப்பிய ‘ஸ்புட்னிக்’ விண்கலம்தான் பூமியில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்.
பிரபஞ்சத்தை நன்றாகப் பரிசோதித்து ஆராய்வதற்காகவே ஆரம்பத்தில் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. நாம் இருக்கும் பூமித்தளத்தில் இருந்து 100 கிலோமீட்டர் உயரம் வரைதான் பிராண வாயு இருக்கும். அதற்கு மேல், வெற்றிடம்தான். உயிர் வாழ முடியாது. அந்த அண்டசராசரப் பிரதேசங்களின் ஆக்கம் என்ன, மற்ற கோள்களின் ஆக்கம் என்ன, விண்வெளிக்குள் இருப்பவை என்னென்ன என்பன போன்ற அதிசயக்கேள்விகளுக்கு விடை காணவே செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
பிறகு, இம்முயற்சி பூமியின் வளர்ச்சிக்குப் பயன்படும்படியாய் மாறியது. புயல் எப்போது வரும், அதன் தாக்கம் எப்படி இருக்கும், பூமியில் நீர்வளம் எங்கெங்கே இருக்கிறது, கனிம வளங்கள் எங்கு உள்ளன, எரிமலை வெடிப்புகளும், கடல் கொந்தளிப்புகளும் எங்கெல்லாம் ஏற்படும் என்பவை போன்ற கண்டுபிடிப்புகளை பூமிக்கு மேலே அதன் அருகாமையில் பறந்தபடி படம்பிடித்து நமக்குக் காட்டின செயற்கைக்கோள்கள்.
கல்வித்துறையில் செயற்கைக்கோள்கள் பிரமாதமாய் உதவுகின்றன. கடந்த இருபது வருடங்களாக ஒளிபரப்புத் துறையில் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு அதிகம். தொலைக்காட்சியில் இத்தனை சேனல்களை நாம் பார்க்க வகை செய்தவை செயற்கைக்கோள்கள்தான்.
இத்தனை சாதனைகளுக்கும் காரணமான முந்தைய செயற்கைக்கோள்கள் அளவில் மிகப் பெரியவை. பல நூறு அடிகள் நீள– அகலம் கொண்டவை. எடையும் அதிகம்தான். பல ஆயிரம் கிலோ எடை கொண்டவை.
விண்கலன்கள் தொடர்பான ஆய்வில், அவற்றின் அளவையும் எடையையும் குறைக்கும் தேவை எழுந்தது. பல விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு சிறு விண்கலன்கள் போதும் என்ற நிலை ஏற்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இதனால் விண்கலச் செலவு குறையும். கூடவே, விண்கலத்தை ஏவ வேண்டிய ராக்கெட்டின் கட்டமைப்பும், அதற்கான செலவும் கணிசமாய் குறையும். சிறு ஆய்வுகள் பலவற்றை செய்ய சின்னச்சின்னதாய் கையடக்க விண்கலன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது, ராட்சத விண்கலன்களில் இருந்து குட்டி விண்கலன்கள் நோக்கி பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திய ஒரு திருப்பம்.
குறு விண்கலன்கள்
செவ்வாய்க் கிரகத்துக்கு ஒரு விண்கலன் அனுப்பப் படும்போது, அது செய்யக்கூடிய ஆய்வுகளுக்குத் துணையாக இருக்க பல துணை செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவையே, குறு விண்கலன்கள் அல்லது நானோ விண்கலன்கள் உருவாக அஸ்திவாரமிட்டன.
ஒவ்வொரு சிறு விண்கலனும் ஒரு ‘கியூப்’ போல இருக்கும். அவ்வளவுதான். சில வருடங்களுக்கு முன்னால் இது அறிமுகமானபோது இதன் எடை அதிகபட்சம் 100 கிலோ இருந்தது. இப்போது சுமார் ஒரு கிலோ எடை வரை குறைந்த எடையில் உருவாகிறது.
உள்ளங்கைக்குள் அடங்கிவிடும்படி இதன் அளவு உள்ளது. நீள, அகலங்கள் மொத்தமே நான்கு அங்குலம்தான் வருகிறது. நான்கு சதுர அங்குல பரப்புக்குள், பெரும் விண்வெளி ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்!
மேற்கொள்ளப் போகும் ஆய்வின் ஆழத்தைப் பொறுத்து சிறு செயற்கைக்கோளின் எடை அதிகபட்சம் 100 கிலோ வரையிலும், அதன் அளவு ஒரு பெரிய இரும்புப்பெட்டி அளவிலும் அமைகிறது.
சிறுசெயற்கைக்கோள் ஆராய்ச்சிகள்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, எதிர்வரும் சில ஆண்டுகளில் ஏவப்படும் ராக்கெட்டுகளுடன் விண்ணில் பறக்க மொத்தம் 12 சிறு செயற்கைக்கோள்களை அமைத்துள்ளது. கைகளில் அடங்கி விடும் அளவுக்கு சிறு ‘கியூப்’ போல இருப்பதால் இதற்கு ‘கியூப்சாட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள் ளது.
ஆனால் இது நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் உள்ளன. ஆய்வு, கல்வி, அறிவியல் மற்றும் புதுத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு இது உதவ வேண்டும். நமது சூரிய மண்டலம் எப்படி உருவானது என்பது முதல், புதுக் கணினி கண்டு பிடிப்புகள் வரை சிறுசெயற்கைக்கோள் ஆராய்ந்து விவரிக்க வேண்டும்.
2016–ல் 15 கியூப்சாட்களையும், 2017–ல் 12 கியூப்சாட் களையும் விண்ணில் செலுத்த அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள மொத்த மாநிலங்கள் 50. இன்னும் ஐந்தாண்டுகளில், இந்த எண்ணிக்கைக்கு நிகராய் 50 சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் சுழலவிட அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது.
சிறுசெயற்கைக்கோள் தொழில்நுட்பம்
பெரிய செயற்கைக்கோள்கள் தமது ராக்கெட்டின் உந்துசக்திக்கு ஒரே ஒரு வேதிப்பொருளையே சார்ந்திருக்கும். வழக்கமாய் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிக்கலான அமைப்புக் கொண்டது. சிறு செயற்கைக்கோள்கள் சிக்கலற்ற கார்பன்–டை–ஆக்சைடு வாயுவைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
சிறுசெயற்கைக்கோள்களின் தகவல் பரிமாற்றத்துக்கு ரேடியோ அலைகளே போதுமானதாய் இருப்பது ஓர் அனுகூலம். லேசர் ரிசீவர் மற்றும் ஆன்டெனா அடுக்கு போன்ற நவீன முன்னேற்றங்கள், சிறு செயற்கைக்கோள்களை செல்லப்பிள்ளையாக்கிவிட்டன.
செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி விண்வெளிக்குச் சென்று இயங்குபவை என்பதால், அந்தத் தட்பவெப்பத்துக்கு ஏற்றவாறு இவற்றின் எலக்ட்ரானிக் உபகரணங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். சிறு செயற்கைக்கோள் களுக்கான செலவு குறைவு என்பதால் இந்தச் சவால்களை எல்லாம் சுலபமாய் சோதித்துப் பார்க்க முடிகிறது.
2012–ல் சிறு செயற்கைக்கோள் திட்டத்தின்படி ஒரு நானோ செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இதன் வெற்றி தந்த ஊக்கத்தால், பல நிறுவனங்கள் சிறு செயற்கைக்கோள்களைத் தயாரித்து விண்ணில் விட முன்வந்துள்ளன.
இனி தனிமனிதன் அல்லது ஒரு தொழில் நிறுவனம் விண்ணிலிருந்து திரட்ட நினைக்கும் தகவல்களுக்காக சுயமாய் ஒரு சிறுசெயற்கைக்கோளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறுசெயற்கைக்கோளை உருவாக்கி, விண்ணில் ஏவி, அது தரும் தகவல்களை திரட்டிக் கொண்டிருக்க ஆகும் செலவு, 10 லட்சம் டாலர்கள். சில தொழில் நிறுவனங்கள் ஒன்று கூடி நிதி ஒதுக்கினாலே, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு என பலதரப்பட்ட தேவைகளுக்கு குட்டி செயற்கைக்கோள்களை உருவாக்கிவிடலாம்.
கடந்த 2010–ம் ஆண்டு, ஜூக்னூ சிறுசெயற்கைக்கோள் ஒன்றை கான்பூர் ஐ.ஐ.டி. உருவாக்கியது. ‘இஸ்ரோ’வின் பங்களிப்புடன் நமது அடுத்த விண்வெளி ஏவுதல்களில் நிச்சயமாய் சிறு செயற்கைக்கோள்களின் பங்களிப்பு அதிகமாய் இருக்கும் என்று நம்பலாம். சிறிய விண்கலம், பெரிய சாதகம்!








