கோடை விடுமுறை
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்காக பெரும்பாலான பொதுமக்கள் சென்னை உள்பட பெருநகரங்களில் வசித்து வரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.
மெரினா கடற்கரை
காலையில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதிய நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் குறையத்தொடங்கியதால் மாலை நேரத்தில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
மாலையில் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலைகளாகவே காணப்பட்டது. சிலர் தங்களது குடும்பத்தினரோடு கடற்கரை மணலில் அமர்ந்து எழில்மிகுந்த கடலின் அழகை பார்த்து ரசித்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உற்சாக மிகுதியில் சிலர் கடலில் நீராடி தங்களுடைய உஷ்ணத்தை தணித்தனர்.
செயற்கை நீரூற்று
கடற்கரைக்கு பொழுதை கழிப்பதற்காக வந்திருந்தவர்கள் பலுன்களை துப்பாக்கியால் குறிபார்த்து சுடுதல், குதிரை சவாரி செய்தல், ராட்டினங்களில் சுற்றுதல் உள்ளிட்ட மனதுக்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். பாறைகளில் இருந்து தண்ணீர் உருண்டோடி வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
மெரினா கடற்கரைக்கு எழில் சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த செயற்கை நீரூற்றின் முன்பாக நிற்பதை நினைவுச்சின்னமாக கருதி பெரும்பாலான பொதுமக்கள் புகைப்படம் எடுத்துச்சென்றனர். மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை தருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.








