விண்ணப்பம்
தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 65 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகும். ஆனால் சிறுபான்மையின கல்லூரிகளாக இருந்தால், அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 65 சதவீதத்திற்கு பதிலாக 50 சதவீதம் கொடுத்தால் போதும். மீதம் உள்ள 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வினியோகத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் துணைவேந்தர் மு.ராஜாராம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜூலை 1-ந் தேதி கலந்தாய்வு
என்ஜினீயரிங் சேர விண்ணப்பங்கள் 27-ந் தேதி வரை வழங்கப்படும். ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சென்னையில் மட்டும் 29-ந் தேதி கடைசிநாள். மற்ற இடங்களில் 27-ந் தேதி தான் கடைசி நாள்.
அரசு ஒதுக்கீட்டில் சேர தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. மாணவர்கள் என்ஜினீயரிங் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்த பிறகு, ரேண்டம் நம்பர் ஜூன் மாதம் 15-ந் தேதி ஒதுக்கப்படும். 19-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
விளையாட்டுத்துறை மாணவர்கள் பி.இ. சேர்வதற்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 28-ந் தேதியும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு 29-ந் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளன.
ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி முடிவடைய உள்ளது. ஜூலை 31-ந் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.
அருகில் இருந்த என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
20 கவுண்ட்டர்கள்
என்ஜினீயரிங் விண்ணப்பம் வாங்க வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் விண்ணப்பத்தை எளிதில் பெற வசதியாக தனித்தனியாக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுவரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் பாடப்பிரிவு ‘மைன்ஸ்’ (சுரங்கம்) மாணவர்களுக்கு மட்டும்தான் இருந்தது. இந்த வருடம் முதல் அந்த பிரிவில் மாணவிகளும் படிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்த வருடத்திற்கான என்ஜினீயரிங் விண்ணப்பத்தில் மைன்ஸ் பிரிவில் மாணவர் மற்றும் மாணவிகள் சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றுகள்
மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்போது பல வகையான சான்றுகளை வைத்திருக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள நிரப்பப்பட்ட கோடிங் ஷீட், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் நகல், பிளஸ்-2 மதிப்பெண் நகல், பள்ளி மாற்றுச்சான்று (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) நகல், நிரந்த சாதிச்சான்று நகல், பிளஸ்-2 ஹால்டிக்கெட் நகல், சொந்த ஊர் சான்று (நேட்டிவிட்டி சான்று) நகல், முதல் தலைமுறை பட்டதாரியாக படிக்க வந்துள்ளதற்கான சான்று நகல் ஆகியச் சான்றுகளை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பவேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.500. ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். அவருடன் பேராசிரியர்கள் ஜி.நாகராஜன், ராமலிங்கம், ராஜேந்திர பூபதி ஆகியோரும் கலந்தாய்வு தொடர்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.








