காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 50.15
கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டடப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்
காஞ்சிபுரம், ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், பட்டுக்கோட்டை, திருக்குவளை,
அரியலூர், பண்ருட்டி, திருச்சி (பாரதிதாசன் பொறியியல் கல்லூரி),
ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 13 இடங்களில்
இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரத்தில் சென்னை - பெங்களூரு தேசிய
நெடுஞ்சாலை பொன்னேரிக்கரையில் இந்தக் கல்லூரிக்கென 10.56 ஏக்கர் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. கடந்த 2010- 2011-ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தக் கல்லூரி
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 857 மாணவர்கள் பயின்று
வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரிக்கு முறையான கட்டட வசதி, ஆய்வக
வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாணவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்
கல்லூரிக்கென, தனிக் கட்டடம், மாணவ, மாணவிகளுக்கென விடுதி வசதி ஆகியன கட்ட
தமிழக அரசு ரூ. 50.15 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல்
நாட்டி வைத்து கட்டடப் பணிகளை தொடக்கிவைத்தார். இந்தக் கட்டடப் பணி ஓரிரு
மாதங்களில் முடியும் தருவாயில் உள்ளது. வரும் கல்வி ஆண்டில் புதிய
கட்டடத்தில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து மாணவர்கள் கூறியது: அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி என்று ஆசையில் வந்தோம். ஆனால் போதிய வகுப்பறை, ஆய்வக வசதி இல்லாமல் இருந்தது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டடத்தில் வகுப்பு நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.







