கள்ளநோட்டு புழக்கம்
இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு
உள்ளது. குறிப்பாக 500, 1,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிகம்
புழங்குகின்றன. இந்திய பொருளாதாரத்தை நசுக்க பாகிஸ்தான் போன்ற சில அண்டை
நாடுகளும் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றன.
2005–ம்
ஆண்டுக்கு பிறகு இந்தியா அச்சிட்டு வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள்
பாதுகாப்பு தன்மை கொண்டவை. இதனால் 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட
இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ்
வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.
மாற்றிக் கொள்ளலாம்
அதன்படி 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500, 1,000 ரூபாய்
நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம்
எனவும் அல்லது தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்திக் கொள்ளலாம்
என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி
1–ந்தேதி என்று முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.
எனினும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்தது.
30–ந்தேதி கடைசி நாள்
அதன்படி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள
வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். எனவே இதற்குள் இந்த ரூபாய் நோட்டுகளை
மாற்றிக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்கும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக்
கொண்டுள்ளது.
2005–ம் ஆண்டுக்கு முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை
அடையாளம் காண்பது எளிதான ஒன்றாகும். இந்த நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்
ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம் பெற்றிருக்காது.
அதே நேரம்
2005–க்கும் ஆண்டுக்கு பின்பு அச்சிடப்பட்ட இந்த மதிப்பிலான ரூபாய்
நோட்டுகளின் பின்புறத்தின் கீழ் பகுதியில் அச்சிட்ட ஆண்டு தெளிவாகத்
தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.