பாரதத்தில் உருவான அரிய கலைகளுள் யோகக் கலை முதன்மையானது. யோகத்தைப் பற்றி
கூறும் ஹடயோக பிரதீபிகா, சிவ சம்ஹிதா போன்ற பழைமை வாய்ந்த நூல்களில் யோகக்
கலையை தோற்றுவித்தவர் சிவபெருமான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரிய
கலையான யோகக் கலையைப் பார்வதிக்கு சிவன் போதித்தாகவும் கூறப்படுகிறது.
மேலும், உலகில் உள்ள 5 லட்சம் ஜீவராசிகளைக் கொண்டு 5 லட்சம் ஆசனங்களையும் உருவாக்கியதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கேற்றார்போல்
பல்வேறு ஆசனங்களும் பாம்பு படமெடுக்கும் நிலை, வெட்டுக்கிளி, ஆமை, பசு,
குதிரை, கருடன், மீன், மயில், சிங்கம் என பல வகை உயிரினங்களின்
தோற்றங்களாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில்
ஆயிரக்கணக்கான ஆசனங்கள் மறைந்து இன்று சில நூறு ஆசனங்களே பழக்கத்தில்
உள்ளன.
யோக் என்ற சொல்லில் இருந்து யுஜ் என்ற சம்ஸ்கிருத சொல் மருவி
உருவானதாகக் கூறப்படுகிறது. யுஜ் என்பதற்கு ஒருங்கிணைப்பு என்று பொருள்.
உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைப்பது யோகம்.
இயமம், நியமம்,
ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகைப்
பிரிவுகளை உள்ளடக்கியது அஷ்டாங்க யோகம் என்றழைக்கப்படுகிறது.
ஆனால்,
இவற்றில் ஆசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய மூன்று மட்டுமே முக்கியத்துவம்
பெற்றுள்ளது. யோகா நிலையங்களிலும் இந்த மூன்று மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
யோகக்
கலையை தோற்றுவித்தவராக சிவபெருமான் குறிப்பிடப்பட்டாலும், அக் கலையைச்
செழுமைப்படுத்தியதில் பதஞ்சலி மகரிஷிக்கு முக்கியப் பங்குண்டு. யோகப்
பயிற்சியினால் ஏற்படும் பலன்களை விளக்கி பதஞ்சலி எழுதிய யோக
சூத்திரத்துக்கு இணையான நூல்கள் இல்லை. இதுவே யோகத்துக்கு ஆதார நூலாக
விளங்குகிறது என்றால் மிகையாகாது.
வீரத் துறவி சுவாமி விவேகானந்தர்
தன்னுடைய ராஜயோகம் என்ற நூலில், பதஞ்சலியின் யோக சூத்திரத்துக்கு விளக்கம்
எழுதியுள்ளார் என்றால், யோக சூத்திரத்தின் சிறப்புகளைத் தனியாக விளக்க
வேண்டியதில்லை.
யோகக் கலையைப் பற்றி சித்தர்களின் பாடல்களிலும்
கூறப்பட்டுள்ளது. கர்ம வினையைக் கடக்க, பிறப்பை அறுக்க, மறு
பிறப்பிலிருந்து விடுபட உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி யோகக் கலையைச்
சிரத்தையுடன் பயில்வோருக்கு அனைத்தும் சித்திக்கும் என்கிறது சித்தர்
பாடல்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகக் கலை தொடக்கக் காலங்களில்
ஆசிரமங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால் அனைத்துத் தரப்பினரும் அறிய
முடியாத நிலையில் இருந்தது.
காலச் சூழலில் யோகக் கலையின் சிறப்புகளை
அறிந்த பலரும் எடுத்த முயற்சியின் விளைவாக இன்று எல்லோரும் கற்கும் கலையாக
மாற்றப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கலையாகவும், சன்னியாசிகள் மட்டுமே
பயன்படுத்தும் கலையாகவும் பார்க்கப்பட்ட யோகக் கலைக்கு பல நாடுகளில் தடை
விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காலப்போக்கில் யோகப் பயிற்சிகள் மனித
உடலியலில் ஏற்படுத்தும் அற்புதமான மாற்றங்களைப் பற்றிய விஞ்ஞான ஆய்வு
முடிவுகள், யோகாவுக்கு எதிரான நாடுகளின் நிலையையும் மாற்றிக் கொள்ள வைத்தன.
இதனால், மேலை நாடுகளில் யோகாவுக்கான தடைகள் விலக்கிக்
கொள்ளப்பட்டதோடு அல்லாமல், பொது இடங்களிலும் ஏராளமான மக்கள் கூடி யோகப்
பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடியும்.
உடலியல் மட்டுமன்றி
மன அழுத்தம், மன இறுக்கம், விரக்தி, மனச் சோர்வு ஆகிய பிரச்னைகளுக்கும்
நல்ல பலன்களைத் தருவதால், தற்போது உளவியல் பிரச்னைகளுக்கும் தீர்வாக யோகா
பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
யோகாவுக்காக தனியான இட
வசதியோ, விலைமிக்க சாதனங்களோ தேவையில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே
அவற்றைப் பயிற்சி செய்ய முடியும். தினசரி அரை மணிநேரம் கூட யோகப்
பயிற்சிக்கு போதுமானது.
நின்ற, அமர்ந்த, படுக்கை என மூன்று நிலைகளில் அளிக்கப்படும் யோகப் பயிற்சி உடலையும், மனதையும் இளமையோடு தோன்றச் செய்கிறது.
சர்க்கரை
நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பல தீவிரமான நோய்களுக்கு
அருமருந்தாகவும், அவற்றை வரவிடாமல் தடுப்பதற்குரிய வல்லமையையும் யோகா
கொண்டுள்ளது.
யோகப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் நாள்தோறும்
புத்துணர்ச்சியுடனும், பணி ஈடுபாட்டுடனும் இருப்பதை உணர முடியும். பள்ளி,
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகா போதிப்பதன் மூலம் சுரப்பிகள்
கட்டுப்படுத்தப்பட்டு இளமையில் வழிமாறிச் செல்வதைத் தடுக்க முடியும்.
குடும்பத்தினர் அனைவரும் இணைந்து யோகப் பயிற்சி மேற்கொண்டால் குடும்பத்தினரிடையே இணக்கமும் அதிகரிக்கும்.
கடந்த
ஆண்டு ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது விடுக்கப்பட்ட
வேண்டுகோளையடுத்து, ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 170 நாடுகள் ஆதரவளித்துள்ளன.
இந்த
நாள் வெறும் விழிப்புணர்வை மட்டுமே உண்டாக்க இயலும். முறையான குரு
ஒருவரிடம் யோகக் கலையைப் பயின்று தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே
எதிர்பார்க்கும் பலனை அடைய முடியும்.