தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் செவிலியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளி, கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி உள்பட 14 மையங்களில் 22 அறைகளில் இத்தேர்வு நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம் சாப்டர் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற தேர்வு மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ம.க. குழந்தைவேல், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருநெல்வேலி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இம்மாவட்டத்தில் 6,750 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6,307 பேர் தேர்வு எழுதினர். 443 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.








