எம்.பி.பி.எஸ். படிப்பில் 76 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் ஒரு இடமும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்காக ஒதுக்கப்படும். எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான ஜூன் 19-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
3 சதவீத ஒதுக்கீடு: தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,257. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 68 இடங்கள் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 82 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விளையாட்டுப் பிரிவு: விளையாட்டுப் பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பிரிவில் சிறந்து விளங்கும் 3 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் சிறந்து விளங்கும் 3 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் வகையில், ஓரிரு நாளில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்து பரிந்துரைப் பட்டியலை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்.
முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு...இந்தப் பிரிவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர மொத்தம் 632 பேர் விண்ணப்பிதுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 இடங்களும் பி.டி.எஸ். படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவுக்கு வரும் 19-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்.
ஜூன் 20 முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு: சிறப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள், சிறப்புப் பிரிவில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவரோ அந்தந்த சமுதாயப் பிரிவினரின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் கழிக்கப்படும்.
மேலும் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களில், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு உரிய மேலே குறிப்பிட்ட 76 எம்.பி.பி.எஸ். இடங்களைக் கழித்த பிறகு மீதமுள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், இட ஒதுக்கீடு விகித அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப் பிரிவு உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
பொதுப் பிரிவு கட்-ஆஃப் 200-க்கு 198
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 198-ஆகக் குறைந்துள்ளது. இதேபோன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆகக் குறைந்துள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த பொதுப் பிரிவு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 198.25-ஆகவும் இருந்தது.
இந்த ஆண்டு 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 17-ஆகக் குறைந்ததும் (கடந்த ஆண்டு 132 பேர் 200-க்கு 200), தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 2,257-ஆக அதிகரித்திருப்பதும், கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்ததற்குக் காரணங்களாகும்.








