அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu இணையதளத்தில் இந்தத் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண்ணை சமர்ப்பித்து 10 இலக்க சமவாய்ப்பு எண்ணை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் சமர்ப்பித்தனர். இவர்களில் மாணவர்கள் 95,300 பேர், மாணவிகள் 58,938 பேர் ஆவர். இதேபோல, விளையாட்டுப் பிரிவின் கீழ் 2,067 பேரும், மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பிரிவின் கீழ் 348 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான பிரிவின் கீழ் 2,115 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா இந்த சமவாய்ப்பு எண் வெளியிடும் நடைமுறையைத் தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்களில் 300 முதல் 400 மாணவர்களுக்கு ஒரே கட்-ஆஃப் இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது, கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணிதப் பாடத்தோடு, இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படும். சமவாய்ப்பு எண்ணின் மதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடம் அளிக்கப்படும்.
கடந்தமுறை 124 மாணவ, மாணவிகளுக்கு இந்த சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது. இதேபோல, இம்முறை விண்ணப்பித்த 1,54,238 பேருக்கும் சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண்ணைச் சமர்ப்பித்து இந்த சமவாய்ப்பு எண்ணை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இம்முறை எத்தனை பேருக்கு சமவாய்ப்பு எண் பயன்பட உள்ளது என்பது, தரவரிசைப் பட்டியல் வெளியிடும்போது தெரியவரும் என்றார்.
2 லட்சம் இடங்கள்: 2015-16 கல்வியாண்டில் 538 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 78 ஆயிரத்து 917 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிலான 21 ஆயிரத்து 741 இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைத்ததால் இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 658 ஆக உயர்ந்துள்ளது.
கல்லூரிகள் தொடர்ந்து நிர்வாக ஒதுக்கீடு இடங்களை ஒப்படைப்பார்கள் என்பதால், இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ரைமண்ட் கூறினார்.
ஜூன் 19- இல் தரவரிசைப் பட்டியல்
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வருகிற
19-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதியும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூன் 29-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
80 ஆயிரம் பேர் முதல் தலைமுறை மாணவர்கள்
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் 80,446 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2014-15 கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் 92 ஆயிரம் பேர் முதல் தலைமுறை மாணவர்களாக இருந்தனர். இந்த முறை இந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.இந்த மாணவர்கள் பி.இ. படிப்புகளில் சேரும்போது, தமிழக அரசின் ஆணைப்படி கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு கட்டண நிர்ணயத்தின்படி, முதல் தலைமுறை மாணவர்கள் அரசுக் கல்லூரியில் சேர்ந்தால் ரூ. 2,000 கல்விக் கட்டணத்தையும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால் ரூ.4,000 கட்டணத்தையும் கழித்துவிட்டு மீதித் தொகையை செலுத்தினால் போதுமானது.
இதுபோல, சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேரும் முதல் தலைமுறை மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் கல்விக் கட்டணத்தை கழித்துவிட்டு மீதமுள்ள ரூ. 25 ஆயிரத்தை செலுத்தினால் போதுமானது.
இந்த நிலையில், 2015-16 கல்வியாண்டில் மாணவர்களிடம் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் விரைவில் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என கட்டண நிர்ணயக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.








