ரயில் நிலைய கவுன்டர்களில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். அப்போது சுமார் 4 ஆயிரம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் முறைகேடாகக் கிடைப்பதாகக் கூறப்பட்டது.
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். முன்பதிவு மென்பொருளில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்தி 8 மணியில் இருந்து 8.01 மணிக்குள் உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டுகள் சில பயணிகளுக்கு அதிக விலையில் கைமாறுவதாகப் புகார் கூறப்பட்டு வருகிறது.
தத்கால் முறைகேடு: இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் ரயில்வே பயணச் சீட்டு முன்பதிவுகளில் நிறைய முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. இணையத்தில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்படுவதால் நேரடியாக கவுன்டருக்குச் செல்லும் பயணிகளுக்கு பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றம் மிஞ்சுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை முகவர்கள் இணையம் வழியாக பயணச் சீட்டைப் பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இணையம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடவடிக்கைகளை இந்திய ரயில்வேயின் கேட்டரிங்- டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) கவனித்து வருகிறது. இணைய மோசடி குறித்து நிறைய புகார்கள் வருவதைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபடும் இணையப் பதிவுகளை அடையாளம் காணும் பணியை கடந்த ஜனவரி முதல் ஐஆர்சிடிசி தொடங்கியது.
கடந்த மார்ச் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 4.6 லட்சம் இணையப் பயனீட்டாளர்களின் அடையாளப் பதிவுகளையும், 71 ஆயிரம் மின்னஞ்சல் பதிவுகளையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது:
கடந்த பல ஆண்டுகளாக முகவர்களாலும், சில ஊழியர்களாலும் பயணச் சீட்டு முன்பதிவு மென்பொருளைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடந்து வந்தன. இப்போது மென்பொருளின் தரம் உயர்த்தப்பட்டு குறைபாடுகள் களையப்பட்டுவிட்டன.
இதன் காரணமாகவே புதிய நேர மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இனி, சாதாரணப் பயணிகளுக்கு தத்கால் பயணச் சீட்டுகள் ஒழுங்காகக் கிடைக்கும் என்றார்.
இன்று முதல் புதிய நேரம்
தத்கால் ரயில் பயணச் சீட்டுகளுக்கான முன்பதிவு நேரம் திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் மாறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏ.சி. வகுப்பு ரயில் பெட்டிகளுக்கான தத்கால் பயணச்சீட்டுகள் காலை 10 முதல் 11 மணி வரையும், ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு பகல் 11 மணியில் இருந்தும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் முகவர்கள் தத்கால் அல்லாத சாதாரண பயணச் சீட்டு முன்பதிவை காலை 8 முதல் 8.30 மணி வரை செய்ய முடியாது.
அதேபோல, தத்கால் முன்பதிவில் ஏ.சி. பெட்டிகளுக்கான முன்பதிவை காலை 10 முதல் 10.30 மணி வரை செய்ய முடியாது, சாதாரண வகுப்புகளுக்கான தத்கால் முன்திவை 11 முதல் 11.30 மணி வரை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








