காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த உமாபதி
மகன் முத்தீஸ்வரன் (18). இவர், தாம்பரம் சேலையூர் பாரத் பல்கலைக் கழகத்தில்
பயோ-மெடிக்கல் பொறியியல் பிரிவில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இளமைப்
பருவம் முதல் யோகாசனத்தில் ஆர்வம் கொண்ட இவர், நேபாளம், மலேசியா,
தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு யோகாசன போட்டிகளில் பங்கேற்று பல
பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடந்த ஆசியக் கோப்பை யோகாசன போட்டியில் முத்தீஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்தப் போட்டியில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்
உள்ளிட்ட 21 ஆசிய நாடுகளின் யோகாசன வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், 18
வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் முத்தீஸ்வரன் கலந்து கொண்டு வென்றி
பெற்றார்.
தொடர்ந்து, சாம்பியன் மீட் என்ற அடுத்தகட்டப்
போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றி பெற்றார். இறுதியில், தாய்லாந்து
வீரருடன் மோதிய முத்தீஸ்வரன், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டத்தைக்
கைப்பற்றினார். அவருக்கு ஆளுயரக் கோப்பை, பதக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவர் முத்தீஸ்வரன் கூறுகையில், நான்
தாய்லாந்து சென்று போட்டியில் கலந்து கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும்
பாரத் பல்கலைக் கழகம் செய்து என்னை ஊக்கப்படுத்தியது.
நான் வெற்றி பெற்றதற்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர் பாஸ்கர் பொன்னுரங்கம் பெரும் உறுதுணையாக இருந்தார் என்றார்.