வழக்கமாக ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படும் இந்தக் கலந்தாய்வை, இந்த முறை ஒரு வார காலம் முன்னதாக, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ. முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு கடந்த மே 16, 17 தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 44 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), பொறியியல் பட்டதாரி நுண்ணறிவுத் தேர்வு (கேட்) மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.








