தமிழகத்தின் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் என்.எல். சார்லஸ். இவரது மனைவி மேரி. இவர்களது மகள் பெனோ ஜெஃபைன். பிறவியிலேயே பார்வையற்ற இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்வையற்றவருக்கான லிட்டில் ஃபிளவர் பள்ளியில் பிரெய்லி முறையில் பயின்றார்.
இந்நிலையில், இளங்கலைப் படிப்பைப் படித்த போது இவருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது. அத்தேர்வை எழுதுமாறு இவரை பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஊக்குவித்தனர்.
இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் இவர் பிரெய்லி முறையில் தேர்வெழுதினார். 2014, ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 343-ஆம் இடம் பெற்றார். இதையடுத்து, இவருக்கு மத்திய வெளியுறவுத் துறையில் உதவிச் செயலர் அந்தஸ்தில் ஐ.எஃப்.எஸ். அதிகாரி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெள்ளிக்கிழமை இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது பெனோ ஜெஃபைன் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது: யுபிஎஸ்சி தேர்வில் எனக்கு ஐ.எஃப்.எஸ். பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம், மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற்றது. அகில இந்திய அளவில் முதல் முறையாக பார்வையற்றோர் பிரிவில் நான் இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை எட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, ஜித்தேந்தர் சிங், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சந்திரலேகா, மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி, தமிழக பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீநிவாஸன், மகாராஷ்டிர எம்.பி. கோபால் ஷெட்டி மற்றும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாôரிகள், பெற்றோர், நண்பர்கள் ஆகியோர் பெரும் உதவியாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பெனோ ஜெஃபைன்.








