கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர, விண்ணப்பிக்கும் மாணவர்
எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் குறைந்துள்ளது. இந்த படிப்புகளில்
சேர முதன்முறையாக, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பம் பெறும் முறை, இந்த
கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி
நாள், கடந்த 10-ம் தேதி.
கால்நடை மருத்துவப் பல்கலை
தேர்வு கட்டுப்பாட்டாளர் திருநாவுக்கரசு கூறியதாவது:மொத்தமுள்ள, 340
இடங்களுக்கு, 16,500 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். கடந்த ஆண்டு, 18
ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன; இந்த ஆண்டு, 1,500 விண்ணப்பங்கள் குறைவாக
வந்துள்ளன. இந்த ஆண்டு, கால்நடை மருத்துவர் (இளநிலை) படிப்புகளில் சேர,
12,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு வரை, அச்சிடப்பட்ட
விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. அதனால், மாணவ, மாணவியர், எதற்கும்
இருக்கட்டும் என, கூடுதல் விண்ணப்பம் வாங்கினர்.
இந்த
ஆண்டில், 'ஆன் - லைன்' விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே,
விரும்புவோர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். அதுவே,
விண்ணப்பங்களின்எண்ணிக்கை குறைய காரணம். தற்போது, விண்ணப்ப பரிசீலனை நடந்து
வருகிறது. தகுதி அடிப்படையில் சேர்க்கை, அடுத்த மாத இறுதியில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். -