கலந்தாய்வுக்கு இடங்கள்
தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு அண்ணாபல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இதுவரை 2 லட்சம் வந்துள்ளன.
கலந்தாய்வு குறித்து என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கலந்தாய்வுக்கு முன்பாக பெற்றோர்கள், மாணவர்கள் உட்கார்ந்து, எந்த கல்லூரியில் எந்த பிரிவு உள்ளது என்பதை திரைகளில் பார்ப்பதற்கு வசதியாக அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. பிறகு அந்த இடத்தை விட்டு எழுந்து கலந்தாய்வுக்கு செல்வதற்கு முன்பாக மாணவர்கள் வரிசையில் நிற்கும் போது, வெயிலில் நிற்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மாணவர்களுக்கு இன்று தரவரிசை
விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் விளையாட்டு சான்றிதழ்களுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
முன்னதாக அந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 500 இடங்கள் விளையாட்டு மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அண்ணாபல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 12 இடங்களும் மற்ற அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 488 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 1,500 பேர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் இன்று(வெள்ளிக்கிழமை) முடிவடைந்து மாலை தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
28-ந்தேதி கலந்தாய்வு
28-ந்தேதி விளையாட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. 29-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூலை 1-ந்தேதி என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு ஒரு மாதம் நடைபெறும். ஜூன் 30-ந்தேதி கலந்தாய்வு முடிவடைகிறது.
இவ்வாறு பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.








