ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்வதை தடை செய்யமுடியாது என்று ஐகோர்ட்டு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜூலை 1-ந் தேதியில் இருந்து கட்டாய ஹெல்மெட் அமலுக்கு வந்தது.
ஆனால் பலர் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கூறி நீதிபதியிடம் முறையிட்டனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் கூடுதல் அட்வகேட்
ஜெனரல் அரவிந்த பாண்டியன், வக்கீல்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ராஜன் பாபு,
காசி ராமலிங்கம் மற்றும் நிம்மு வசந்த் வாதிட்டனர். அப்போது நடந்த வாதம்
வருமாறு:-ஹெல்மெட் கட்டாயம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜூலை 1-ந் தேதியில் இருந்து கட்டாய ஹெல்மெட் அமலுக்கு வந்தது.
ஆனால் பலர் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கூறி நீதிபதியிடம் முறையிட்டனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
பால்கனகராஜ்:- ஹெல்மெட் தொடர்பான உத்தரவு 1989 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்டன. 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பத்திரிகை செய்திக் குறிப்பை அப்போதைய அரசு வெளியிட்டது. அதில், இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் அமர்ந்து செல்கிறவர்களுக்கு சிரமம் இருந்ததையடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
பெண்கள், குழந்தைகள்
அதன்படி, பெண்கள், குழந்தைகள், மெய்வழி மார்க்கத்தார், சீக்கியர்கள் இதன் மூலம் விலக்களிக்கப்பட்டனர். ஆனால் தற்போது ஒட்டுமொத்த பேரையும் உள்ளடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது மக்களின் கருத்தைக் கேட்டு அரசு உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதுபோல தற்போதும் மக்கள் கருத்தை தமிழக அரசு கேட்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும். பொதுவான இமெயில் முகவரியை உருவாக்கி அதன் மூலம் மக்களின் கருத்தை அறியலாம்.
தரமானதாக இல்லை
தற்போது வழங்கப்படும் ஹெல்மெட் மீது ஐ.எஸ்.ஐ. ஸ்டிக்கர் போலியாக ஒட்டப்படுகிறது. அந்த ஹெல்மெட்டுக்கு சரியான தரம் இருக்கவில்லை. எனவே இதுபோன்ற ஹெல்மெட்டை விற்பனையாளரிடம் திருப்பித் தரும்போது பிரச்சினை ஏற்படுகிறது.
பிரச்சினை இயல்புதான்
நீதிபதி:- எந்த சட்டத்தையும் அமல்படுத்த உத்தரவிட்டாலும் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். நானும் மக்களிடையேதான் பயணிக்கிறேன். பஸ்சில் செல்கிறேன். நான் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. சாதாரண ஆள்தான் நான். கோர்ட்டுக்கு வந்தால்தான் நான் நீதிபதி.
இப்படியும் செய்யலாம், அப்படியும் நடந்துகொள்ளலாம் என்று வாய்ப்புகள் கொடுப்பதை சட்டம் என்று கூறமுடியாது. இந்த பிரச்சினை தொடர்பாக நீங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாமே.
விதிவிலக்கு வேண்டும்
பால்கனகராஜ்:- இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது. இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் வழங்க உத்தரவிட வேண்டும்.
பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தாமல் விதிவிலக்கு அளிக்கலாம் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின் 417(ஏ) பிரிவில் கூறப்பட்டுள்ளது. சோரியாசிஸ் போன்ற நோயுள்ளவரால் ஹெல்மெட் அணிய முடியாது.
நீதிபதி:- ஆனால் இதுபோன்ற மருத்துவக் குறைபாடுகள் இருப்பவர்கள் குறைவானவர்கள்தானே. எனவே பொதுவானதாக அதை கூற முடியாது.
நேரம் வீணாகிறது
பால்கனகராஜ்:- விபத்துகள் நேரிடுவதற்கு சாலை வசதி குறைவு, சாலை ஓர மின்விளக்கு வசதி குறைவு போன்றவையும் காரணங்களாக உள்ளன. ஆனால் ஹெல்மெட்டை மட்டும் கட்டாயப்படுத்துவதில் அவசியம் இல்லை.
ஹெல்மெட் அணியாதவர்கள் பிடிக்கப்பட்டு, நடமாடும் நீதிமன்றம் முன்பு நிற்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் முக்கிய நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவர்களின் நேரமும் வீணாகிறது. எனவே போலீசிடமே அபராதம் செலுத்திவிட்டுச் செல்ல உத்தரவிட வேண்டும்.
நீங்கள் எதிரி அல்ல
நீதிபதி:- ஹெல்மெட் விஷயத்தில் மக்கள் நலனுக்காகத்தான் நான் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். ஆனால் என்னை எதிரியாக சிலர் நினைத்து செயல்படுகின்றனர்.
பால்கனகராஜ்:- நீங்கள் எதிரி அல்ல. உங்கள் உத்தரவுதான் எதிரானதாக கருதப்படுகிறது.
வக்கீல் ராஜன்பாபு:- தற்போது விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்கள், முறையான அளவுகள் இல்லாமல் உள்ளன. முகமூடி போலத்தான் காணப்படுகின்றன. ஹெல்மெட் அணிந்து வந்து கோர்ட்டுக்குள் கொலை சம்பவத்தையும் சிலர் நடத்திச் சென்றுள்ளனர்.
1.5 கிலோவுக்கு மேல் இருக்கும் ஹெல்மெட்களால் கழுத்துவலி ஏற்படுகிறது. தண்டுவடத்திலும் பிரச்சினைகள் வரக்கூடும்.
ஹெல்மெட் வடிவமைப்பு
நீதிபதி:- ஹெல்மெட் அணியும்போது பக்கத்தில் உள்ளவைகளை பார்க்க முடியவில்லை, சரியாக சத்தத்தை கேட்க முடியவில்லை என்ற குற்றசாட்டு தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் ஹெல்மெட்டை வடிவமைக்க முடியுமா? என்று கேட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். அதன் நிலை என்ன?
மத்திய அரசு வக்கீல்:- இதுகுறித்து மத்திய தரை வழிப்போக்குவரத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் இந்திய தர நிர்ணய அமைப்புக்கு அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர். ஆனால் இன்னும் பதில் வரவில்லை.
மாலை நேர கோர்ட்டு
அரவிந்த் பாண்டியன்:- நிலுவையில் உள்ள ஹெல்மெட் வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக மாலை நேரத்திலும், சனிக்கிழமையிலும் கோர்ட்டுகளை நடத்துவதற்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காசிராமலிங்கம்:- உங்களிடம் தரப்பட்ட வழக்கு, விபத்து காப்பீடு தொடர்பானது. அது சிவில் மிசலேனியஸ் அப்ளிகேஷன் அடிப்படையிலானது. எனவே அதிலிருந்து மாறி, வேறொரு உத்தரவை உங்களால் பிறப்பிக்க முடியாது.
நீதிபதி:- இதுதொடர்பாக மனு தாக்கல் செய்துவிட்டு வந்து வாதிடுங்கள்.
தடை போட முடியாது
நிம்மு வசந்த்:- விபத்து ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஹெல்மெட் அதில் ஒரு சதவீதம்தான் இடம் பிடிக்கிறது. நான் உங்கள் உத்தரவுக்கு எதிரானவர் அல்ல. ஆனால் போலீசாரின் கெடுபிடிதான் அதிகமாக உள்ளது. ஆவணங்களை பறிமுதல் செய்வதெல்லாம் அதிகபட்சமானது.
எனவே ஹெல்மெட் அணியாதவர்களின் ஆவணங்களைப் பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
நீதிபதி:- தடை விதிக்க முடியாது. மேலும் போலீசார் துன்புறுத்துவதாக கூறக் கூடாது. கோர்ட்டின் உத்தரவை அவர்கள் அமல்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.
பெண்கள், குழந்தைகள், நோயுற்றோருக்கு ஹெல்மெட்டை கட்டாயப்படுத்தக் கூடாது என்பது உட்பட நீங்கள் கூறியுள்ள அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள். அந்த மனுவை 24-ந் தேதி விசாரிப்பேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.