
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும்
பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான ‘இன்ஸ்பையர் அறிவியல் கண்காட்சி’
கோவையில் நேற்று நடைபெற்றது. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை
ஆகியவற்றுடன் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும், தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையமும் இணைந்து இக் கண்காட்சியை நடத்தின. மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் அருள்முருகன், கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில், பெரிய பொருட் செலவுகள் ஏதுமின்றி, அசத்தலான பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அரசுப் பள்ளி மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
குறிப்பாக, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான மின் பற்றாக்குறை,
மாசுக்கட்டுப் பாடு, பொது சுகாதாரம், போக்குவரத்து, மனித - மிருக
எதிர்கொள்ளல் உள்ளிட்டவை களுக்கான தீர்வுகளை, தங்களிடம் உள்ள சாதாரண
பொருட்கள் மூலம் மிகத் துல்லிய கண்டுபிடிப்புகளாக வார்த்திருந்தனர்
மாணவர்கள்.
குறிச்சி செங்கோட்டையா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி நெளபியா ஃபிர்தோஸ், மிக்ஸி
ஜார் மூடிகளையும், சில குழாய்களையும் வைத்து கழிவுநீரிலிருந்து
கார்பனையும், ஆக்சிஜனையும் பிரிக்கும் முறையைக் கண்டுபிடித்திருந்தார்.
வெறும் மாதிரி வடிவமாக மட்டும் இதை வைக்காமல், செயல்முறையில் செய்து
காட்டினார். தொழிற்சாலைக் கழிவுகளை இந்த முறையில் எளிதில் சுத்திகரிக்கலாம்
என அவர் தெரிவித்தார்.
செல்போன் சார்ஜ்
பொள்ளாச்சியை அடுத்துள்ள பொங்காளியூர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் விஜயராஜ்,
ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி செல்போன் சார்ஜ் செய்யும் நவீன இயந்திரத்தை
வடிவமைத்திருந்தார். ‘ஏற்கெனவே தான் தயாரித்த நீர் உந்து இயந்திரம் வேறொரு
அறிவியல் கண்காட்சியில் ரொக்கப் பரிசு பெற்றதாகவும், அந்த பரிசுப் பணத்தைக்
கொண்டு, செல்போன் சார்ஜ் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்ததாகவும், விரைவில்
பெரிய அளவில் இந்த இயந்திரத்தை வடிவமைக்க உள்ளதாகவும் கூறி அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தினார்.
உருளைக்கிழங்கு துப்பாக்கி
‘குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் உண்மையான துப்பாக் கியைப் பயன்படுத்தும்
போது, சில சமயம் தோட்டாக்கள் வெளியேறி குற்றவாளிகள் உயிரிழக்கும் நிலை
ஏற்படும். இதனால் விசாரணை நடத்த முடியாமல் கூட போகலாம். எனவே
தோட்டாவுக்குப் பதில் உருளைக்கிழங்கை பயன் படுத்தலாம்’ என்கிறார் நெ.4
வீரபாண்டி அரசுப் பள்ளி மாணவர் பகதீஸ்வரன். இவர், உருளைக்கிழங்கு மூலம்
இயக்கும் துப்பாக்கியை தயாரித்திருந்தார். இதைப் பயன்படுத்தும்போது
எதிராளியின் எலும்புகள் உடையுமே தவிர, உயிரிழப்பு இருக்காது என
செயல்விளக்கமும் செய்து காட்டினார். துப்பாக்கியிலிருந்து உருளைக்கிழங்கு
தோட்டா அதிவிரைவாக வெளியேறியதைப் பார்த்து பார்வையாளர்கள் அதிசயித்தனர்.
பொதுசுகாதாரம்
பொது இடங்களில் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகள்
பலவற்றிலும் குப்பைகள் நிரம்பி வழிவது சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி
வருகிறது. புலியகுளம், புனித தெரஸா நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி
சண்முகப்பிரியா, இந்த பிரச்சினையைக் கையாளும் கருவி ஒன்றை
வடிவமைத்திருந்தார். குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டால்,
உடனடியாக உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குறுஞ்செய்தி மூலம் எந்த வார்டு, எந்த
குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது என்ற தகவலைத் தெரிவிக்கும்
தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
மயிலேரிபாளையம் அரசு பள்ளி மாணவி துளசி, நீர் தேவைப்படும் இடத்துக்கு
மட்டும் பாசனம் செய்யும் தானியங்கி முறையை தனது தாயாருடன் சேர்ந்து
தயாரித்து கண்காட்சியில் வைத்திருந்தார். விவசாயக் குடும்பம் என்பதால்,
‘நீர் சேமிப்புக்கும், நீர் மேலாண்மைக்கும் தீர்வு காணும் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.
பரிசு விவரம்
இன்ஸ்பையர் அறிவியல் கண்காட்சியில், பெரியநாயக்கன்பளையத்தில் உள்ள சுவாமி
சிவானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவர் தர்மபிரகாஷ் முதல் பரிசு பெற்றார்.
செஞ்சேரிமலை அரசு பள்ளி மாணவர் பிரபு, காடம்பாடி நடுநிலைப் பள்ளி மாணவி
காவ்யா ஆகியோர் இரண்டாம் பரிசும், பொள்ளாச்சி நரசிம்மநகர் பள்ளி மாணவர்
பூபதிராஜா, மதுக்கரை அரசு பள்ளி மாணவர் கிஷோர்குமார், சுப்பேகவுண்டன்புதூர்
நடுநிலைப் பள்ளி மாணவி சங்கீதா ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். 80
பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
மயிலேரிபாளையம் அரசு பள்ளி மாணவி துளசி, நீர் தேவைப்படும் இடத்துக்கு
மட்டும் பாசனம் செய்யும் தானியங்கி முறையை தனது தாயாருடன் சேர்ந்து
தயாரித்து கண்காட்சியில் வைத்திருந்தார். விவசாயக் குடும்பம் என்பதால்,
‘நீர் சேமிப்புக்கும், நீர் மேலாண்மைக்கும் தீர்வு காணும் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.
இப்படி ஒவ்வொரு கண்டு பிடிப்பும், ஒவ்வொரு வகையில் தற்போதைய அடிப்படைப்
பிரச்சினைகளை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருந்தன. கோவை மாவட்டம்
முழுவதிலுமுள்ள நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 93 கண்டுபிடிப்புகளும்,
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 307 கண்டுபிடிப்புகளும்
கண்காட்சியில் இடம் பெற்றன. இதில் பலவும் நேரடியாக பிரச்சினைகளையும்,
தீர்வுகளையும் அலசுபவையாக இருந்தன.
அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும்போது, இதுபோன்ற ஏராளமான
அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவரும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக
இருந்தது.