பராமரிப்பு பணிகளையொட்டி ‘வைகை எக்ஸ்பிரஸ்’ நாளை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
‘வைகை எக்ஸ்பிரஸ்’சென்னை-விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஓலக்கூர்-திண்டிவனம் இடையே என்ஜினீயரிங் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண். 12635) மதியம் 1.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 2.20 மணிக்கு நாளை புறப்பட்டு செல்லும்.
மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரெயில் (வ.எண். 66045/66046) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரெயில்கள் பகுதியாக ரத்து
சென்னை-கூடுர் வழித்தடத்தில் வருகிற 10, 12, 13, 17, 19, 20, 24, 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 2-ந் தேதி ஆகிய நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி சென்னை-கூடுர் வழித்தடத்தில் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.30 மற்றும் 9.55 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து காலை 9.50 மற்றும் 11.10 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் வளாகத்திற்கு வரும் மின்சார ரெயில்கள் எலாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பினாகினி எக்ஸ்பிரஸ்
பித்ரகுண்டா-கூடுர்- சென்னை சென்டிரல் பயணிகள் ரெயில் (வ.எண்.57240) தடா மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல்-விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (வ.எண்.12712) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு புறப்படுவதற்கு பதிலாக 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.