ஆசியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும்
வகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி "ஒரு நாள்' ஆசிரியராகி,
தில்லி அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.இதுகுறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஆசிரியராக இருந்து பின்னாளில் நாட்டின்
குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை,
1962-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுவதென தீர்மானித்தோம்.
இதற்காக, குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை தில்லி முதல்வர் அரவிந்த்
கேஜரிவாலுடன் கடந்த வாரம் சந்தித்து, ஆசிரியர் தினத்தில் பள்ளி
மாணவர்களுடன் நாட்டின் முதல் குடிமகன் என்ற முறையில் கலந்துரையாட வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டோம். இதைக் கேட்டதும் உடனடியாக பிரணாப் முகர்ஜி ஒப்புக்
கொண்டார். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதன்படி, குடியரசுத் தலைவர் எஸ்டேட்டில் உள்ள டாக்டர் ராஜேந்தர் பிரசாத்
சர்வோதய வித்யாலயாவில் பயிலும் மாணவர்களுடன் செப்டம்பர் 4 -ஆம் தேதி காலை
11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பிரணாப் முகர்ஜி பேசவுள்ளார்.
அன்றைய தினம் தங்களுக்கு ஆசானாக குடியரசுத் தலைவர்
இருப்பதை அறிந்து அவரது வருகைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும்
ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
"பி எ டீச்சர்' (ஆசிரியராக இரு) என்ற திட்டத்தை தில்லி
அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கலை, கலாசாரம், விளையாட்டு,
வணிகம், அரசியல், சிவில் சர்வீஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்த
முக்கியமானவர்கள், மாணவர்களுடன் ஆசிரியர்களைப் போல கலந்துரையாட ஏற்பாடு
செய்யப்படும்.
இதற்காக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர்,
குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் வெற்றிகரமாகச் செயலாற்றி வரும் தலைமைச்
செயல் அதிகாரிகள் (சிஇஓ), முக்கியத் தொழில்முனைவோர், சிவில் சர்வீஸ் உயர்
அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவும்,
பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார்.
தில்லியின் நிகழாண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு,
கடந்த ஆண்டைவிட இரு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுப்
பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும்
என்றார் மணீஷ் சிசோடியா. அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர்
அப்துல் கலாம், மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி
வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது பாணியில் பிரணாப் முகர்ஜியும் தங்களுடன்
பேசவிருக்கும் நிகழ்வு பள்ளி மாணவ சமூகத்தினர் மத்தியில் பெரும்
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.