தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10 மணிக்கு கூடுகிறது.மறைந்த
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், மறைந்த முன்னாள் அமைச்சர்
செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு பேரவை
செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்தப் பேரவைக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை மொத்தம் 18 நாள்களுக்கு நடைபெறுகிறது.
புதிய
அறிவிப்புகள்: துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்
நடத்தப்பட்டு, அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன. அடுத்த
சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்தக்
கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மது விலக்குப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் இந்தக்
கூட்டத்தில் தீவிரமாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு
நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 25-ஆம் தேதி தாக்கல்
செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி
சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மானியக் கோரிக்கைகள்: மேலும், செப்டம்பர் மாதம் வரையில் அரசுத் துறைகளின் செலவுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பேரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் அப்போது (கடந்த ஏப்ரலில்) எழவில்லை. இந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தி அவற்றை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
மௌன அஞ்சலி: கூட்டம் தொடங்கியதும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து மௌனம் கடைப்பிடிக்கப்படும்.
அதன் பிறகு, பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமைக்கு (ஆகஸ்ட் 25) ஒத்திவைக்கப்படும். மீண்டும் பேரவை செவ்வாய்க்கிழமை கூடும்போது, வீட்டு வசதி -நகர்ப்புற வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை தொழிலாளர்- வேலைவாய்ப்புத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கைத்தறி- துணி நூல் மற்றும் கதர்த் துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் ஆகியனவும், வியாழக்கிழமையன்று பொதுப்பணித் துறையின் மானியக் கோரிக்கையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகின்றன. துறை வாரியான புதிய அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் தங்களது பதிலுரையின் போது வெளியிடுவர்.