சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக, கட்டணமில்லாதத் தொலைபேசி வசதி செயல்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில்
செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக, மாவட்ட தனி
துணை ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னையில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான இந்தக்
கூட்டத்தில் அவர் பேசியது:
சமுதாயத்தில் நலிந்தோர் பெருமளவில்
பயன்பெறும் வகையில், கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்த
ஓய்வூதிய நிபந்தனைகள் முதல்முறையாகத் தளர்த்தப்பட்டன. ஆதரவற்றோர் என்பதற்கான வரையறைகளைத் திருத்தி அமைத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதனால், மாநிலம் முழுவதும் பெருமளவிலான முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத ஏழைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் கூடுதலான எண்ணிக்கையில் பயன்பெறுகின்றனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஓய்வூதியமானது ரூ. 500-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 22 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை நான்காண்டுகளில் 31 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1,200 கோடியில் இருந்து ரூ. 4,198 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் ஓய்வூதியப் பயனாளிகளும், பொது மக்களும் பயன்பெறும் வகையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக முதல் முறையாக கட்டணமில்லாத தொலைபேசி (1800-425-1090) எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் அனைத்துப் பயனாளிகளின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டு, இணையதளம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
இதனால், 31 லட்சம் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே ஓய்வூதியம் சென்று சேர்வது உறுதி செய்யப்படுகிறது என்றார் அமைச்சர் உதயகுமார். இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன், வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் ஆணையர் மு.ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆணையர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.