நகரப் பகுதியில் நிலவும் மோசமான சுகாதாரக்கேடு காரணமாக சிறியவர்கள், முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஆறு முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிள்ளைகளின் சுகாதாரமான பழக்க வழக்கங்கள் குறித்து கவனிக்க பெற்றோர்களுக்கு நேரமும், விழிப்புணர்வும் இருப்பதில்லை.
கை, கால் விரல் நகங்களை வெட்டும் பழக்கம் பல குழந்தைகளுக்கு சுத்தமாக இல்லை. நகங்களை பற்களால் கடிப்பது, மண்ணில் விளையாடி விட்டு கை கழுவாமல் சாப்பிடுவது, சாலையோரம் விற்கும் ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி உண்பது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் பல மாணவர்களிடம் உள்ளன.
தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிப்பதைப் போலவே, மாணவர்களின் சுகாதாரப் பழக்க வழக்கங்களிலும், அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்களின் சுகாதாரமான பழக்க வழக்கங்களில் ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பது வேதனையான விஷயமாகும்.
சுகாதாரமற்ற பழக்கங்களால், நாளடைவில் மாணவ, மாணவிகள் உடல் ரீதியாக பாதிப்படைகின்றனர். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சிறிய வயதில் உண்டாகும் இந்த சுகாதாரமற்ற பழக்கம், பெரியவர்களாக வளர்ந்த பின்பும் தொடர்கிறது. இதற்குத் தீர்வாக, பள்ளிகளில் சுகாதாரக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.








