தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக விதிமுறையால்
தேர்வில் தோல்வியுற்றதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மருத்துவ
முதுநிலை மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுதொடர்பாக மருத்துவ முதுநிலை
மாணவர்கள் சசிகலாதேவி, செந்தில்குமார், ஐஸ்வர்யா துர்கா காமராஜ் ஆகிய 3
பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:நாங்கள்
எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தோம்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று
பல்கலைக்கழகம் அறிவித்தது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர்.
பல்கலைக்கழகம் தாமாக உருவாக்கிய விதிமுறையால்தான் நாங்கள் தேர்ச்சி பெற
முடியாமல் போனது. முதுநிலை மருத்துவப் படிப்பின் முதலாண்டில் ஒரு தேர்வு
எழுதினோம். இறுதியாண்டில் 3 தேர்வுகளை எழுதினோம். பல்கலைக்கழக விதிமுறைப்படி இறுதியாண்டு தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர். ஆனால்,
மொத்தமாக 4 தேர்வுகளையும் கணக்கிட்டால் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள்
கிடைத்துவிடும். எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக விதிமுறை, இந்திய மருத்துவக்
கவுன்சில் விதிமுறைகளுக்கு முரணானதாக இருப்பதால், நாங்கள் தேர்வில் வெற்றி
பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக விதிமுறை, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைக்கு முரணாக உள்ளது.
எனவே,
மனுதாரர்களைப் பொருத்தவரை, பல்கலைக்கழகத்தின் விதிமுறையை ரத்து செய்து,
அவர்கள் மூவரும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மேலும்,
திருத்திய மதிப்பெண் பட்டியலையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிபதி
உத்தரவிட்டார்.