இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டசபையில் அறிவிப்பு
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8,184 பணியாளர்கள் தினக் கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சீரமைத்திட தங்கள் பணியினை ஊதிய விகித அடிப்படையில் வரன்முறைப்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஜெயலலிதா வழங்கினார்
அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் 5 ஆண்டு காலம் (31.7.2014 அன்றுடன்) தொடர்ந்து பணிபுரிந்த 8,184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 3 பணியாளர்களுக்கு ஜெயலலிதா ஆணைகளை தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ரா.கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முனைவர் மா.வீர சண்முகமணி, கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன், சுற்றுலாத் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








