சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது வீரவலசை கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. தற்போது முதல் வகுப்பில் 2 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவர், நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பில் தலா ஒரு மாணவர் என மொத்தம் 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஓர் ஆசிரியர் பள்ளி இருக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். இவர்தான் இந்த 5 மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் கற்பிக்கிறார்.
பள்ளியில் தனித்தனி வகுப்பறைகள் இல்லாததால் அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில்தான் அமர்ந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கட்டப்பட்ட கழிப்பறை உள்ளது, ஆனால் தண்ணீர் இல்லை என ஊர்மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அப்துல்ரஹீம் கூறியதாவது:
வீரவலசை பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருந்ததால் அந்தப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு தாற்காலிகமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். இந்தப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த கிராம மக்களிடம் பேச உள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.








