கல்வி வளர்ச்சியின் மூலமே மக்களின் பொருளா தார நிலை ஏற்றம் பெறும் என்பதாலும், சமூக பொருளாதார வேறுபாடுகள் களையப்படும் என்பதாலும், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியதுவத்தை எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது.
கடந்த 25-ந்தேதி உயர் கல்வித் துறை மூலம் செயல்படுத்த உள்ள பல அறிவிப்புகளை நான் இந்த மாமன்றத்தில் அறிவித்தேன். அப்போது 5 புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரி கள் துவங்கப்படும் என அறிவித்தேன்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லை. இம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தரமான உயர் கல்வி பெறும் பொருட்டு, தேனி மாவட்டம், வீரபாண்டியிலும், ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலத்திலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காக அரசுக்கு ஒரு கல்லூரிக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் வீதம் மூன்று கல்லூரிகளுக்கு 25 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை இதன் மூலம் உருவாகும். மேலும், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதி யில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் அரசுக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








