பல்கலைக்கழக மாணவர்களுக்கு அக்டோபரிலும், இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு
டிசம்பரிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
செய்துள்ளது.இந்த முறை மாணவர்கள் இரு வேறு வேலைவாய்ப்புகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்கவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கும், இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கும்
வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோ
சாஃப்ட், அடோப், ஃபிலிப்கார்ட் என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முன்னணி
நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தியதில் 120 மாணவ, மாணவிகள் ரூ. 15 லட்சம்
முதல் ரூ. 24 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
அடுத்ததாக
வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 5-க்கும்
மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
தொடர்ந்து டிசம்பரில்
இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்பட உள்ளன. இதற்காக 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த முறை ஒரு மாணவருக்கு இரண்டு
வாய்ப்புகளை வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பு
முகாமில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வாய்ப்பைப் பெற்ற ஒரு
மாணவருக்கு, மீண்டும் துணை நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க
அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.