இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியில் தவில் இசைக் கலைஞர் மயிலை எம்.கே.வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாகசுரம், தவில் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் வெ.பொன்ராஜ், இசையமைப்பாளர் கங்கை அமரன், மாநகர காவல் துறை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கலாமின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெ.பொன்ராஜ் பேசியதாவது: அப்துல் கலாம் இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் மிகவும் பிடிக்கும். அவர் திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும்போதே தியாராஜ கீர்த்தனைகளைக் கேட்க செல்வார். அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசையை விரும்பிக் கேட்பார். இப்படி இசையை கடைசி காலம் வரை தொடர்ந்து ரசித்தவர். அப்துல் கலாமை எளிமையானவராக, பண்பாளராகவும், மனிதராகவும் மாற்றியதற்கு இசைதான் காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.
இ.சி.ஆர். சாலைக்கு கலாம் பெயர்: வங்கக் கடலையொட்டிய கிழக்கு கடற்கரை சாலைக்கு (இ.சி.ஆர்.) அப்துல் கலாம் பெயரை சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை துறைமுகத்துக்கு கலாம் பெயரைச் சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








