திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி) மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. என்.ஐ.டி. இயக்குனர் சீனிவாசன் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்ட இயக்குனர் உன்னி கிருஷ்ணன் நாயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்
சந்திரயான், மங்கள்யான் விண் கலங்களை வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் இந்தியாவின் புகழ் சர்வதேச அளவில் பறைசாற்றப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து இருக்கின்றன. இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று நமது நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரரை அனுப்பி நமது நாடு சாதனை படைக்க இருக்கிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்பது சாதாரண காரியம் அல்ல. பல சவால்கள் நிறைந்தது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில் பல நிலைப்பாடுகள் உள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு சாதனைகளை ஏற்கனவே நிகழ்த்தி இருக்கிறது. அவை எல்லாவற்றையும் விட முக்கியமானது மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது தான். மிகவும் சவாலான இந்த பணியை வெற்றி கரமாக நிறைவேற்றும் பணிகள் அனைத்தும் மிகவும் முன்னேற்றமான நிலையில் உள்ளன. எனவே இந்த திட்டம் எப்படியும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.








