உலக முதலுதவி தினம்: விபத்து நடந்தால் முதல் உதவி சிகிச்சை அளிப்பது எப்படி? 6¾ லட்சம் பேருக்கு செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் பயிற்சி அளித்துள்ளது.
விபத்து நடந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்த
பயிற்சியை 6 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்
நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.
உலக முதலுதவி தினம்
உலக முதலுதவி தினம் நாடு முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ‘செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்’ நிறுவனம் மூலம்
பள்ளிக்குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா
மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு,
செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் (தமிழ்நாடு) தலைவர் மற்றும் அதிகாரிகள் குழு
உறுப்பினர் டி.வடிவேல் முகுந்தன் தலைமை தாங்கினார். இதில் பசுமை
தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, சென்னை
ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், கே.பி.கே.வாசுகி,
ரெயில்வே ஏ.டி.ஜி.பி. லட்சுமி பிரசாத், வருமானவரி முதன்மை ஆணையர்
வி.மகாலிங்கம், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணைய செயலாளர்
குணசேகரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தத்ரூபமாக...
உலக முதலுதவி தினத்தையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா
மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கடந்த 2 நாட்களாக முதலுதவி
சிகிச்சை குறித்த பயிற்சியை, செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனம் மூலம்
அளிக்கப்பட்டது. மாணவிகள் அந்த 2 நாட்கள் எடுத்த பயிற்சியை இந்த
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
அதில்,
2 கார்கள் வருவது போலவும், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் மீது அந்த
கார்கள் மோதுவது போலவும் சித்தரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் காயம்
அடைகிறார்கள். காயம் அடைந்த மாணவிகளுக்கு, முதலுதவி அணியை சேர்ந்த மாணவிகள்
வந்து சிகிச்சை அளிப்பது போல் செய்து காண்பித்தனர்.
மேலும்
விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஏற்றாற் போல், முதலுதவி சிகிச்சை மற்றும்
மருந்து கொடுத்து, ‘ஸ்டெரச்சர்’ மூலம் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைப்பது
போலவும் செய்தனர். இதை பார்த்த பள்ளி மாணவிகள் கூர்ந்து கவனித்தனர். இதில்
பள்ளி மாணவிகள் மட்டும் அல்லாது, அவர்களுடைய பெற்றோர்களும் வந்து
பார்த்தனர்.
முதலுதவி குறித்த பாடம்
முன்னதாக நடைபெற்ற விழாவில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும்
ஒரு முதலுதவி பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது. முதலுதவி குறித்த பயிற்சி
எடுத்த மாணவிகளுக்கு முதலுதவி ‘ஜாக்கெட்’ மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் (தமிழ்நாடு) தலைவர் மற்றும்
அதிகாரிகள் குழு உறுப்பினர் டி.வடிவேல் முகுந்தன் பேசியதாவது:–
அந்த
காலத்தில் பாட்டி வைத்தியம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்
காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது. மறைந்துவிட்டது. இந்த மாற்றத்தை
சரிசெய்ய இந்த முதலுதவி சிகிச்சை குறித்து ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது
பயிற்சி எடுத்திருக்க வேண்டும். அந்த உயரிய நோக்கத்தில் தான் இந்த முதலுதவி
பயிற்சியை அனைவருக்கும் வழங்குகிறோம். இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரம்
பேருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சியை செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்
நிறுவனம் மூலம் அளித்துள்ளோம்.
பள்ளியில் படிக்கும்
மாணவ–மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை குறித்து தெரிவதில்லை.
பாடத்திட்டத்தில் முதலுதவி குறித்த பாடம் இருக்க வேண்டும். எத்தனை பாடம்
படித்தாலும், முதலுதவி குறித்த பாடம் படிப்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மனதில் கொள்ள வேண்டும்
இதையடுத்து, பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி
பி.ஜோதிமணி பேசும்போது, ‘முதலுதவி குறித்து சொல்ல ஒரு இயக்கம்
தேவைப்படுகிறது என்றால், மனிதகுலம் எந்த அளவுக்கு கேவலமாக போய் கொண்டு
இருக்கிறது என்பதை காட்டுகிறது. அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்ற எண்ணத்தை
நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். சாதனை என்பது வேறு. சரித்திரம்
என்பது வேறு. நமக்கு பிறகு இந்த சமுதாயம் நம்மை நினைத்து கொண்டிருக்க
வேண்டுமானால் நல்ல காரியத்தை செய்ய வேண்டும். அதுதான் சரித்திரம். எனவே
முடிந்த அளவு மனித சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியுமோ? அதை செய்ய
வேண்டும்’ என்றார்.







