காலியாக உள்ள 2,500 கிராம சுகாதார
செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, சென்னை டி.எம்.எஸ்.
வளாகத்தில் வரும் 27-இல் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
சென்னையில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.நிர்மலா சனிக்கிழமை கூறியது:
தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் கீழ் சுமார்
1,510 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8,864 துணை சுகாதார நிலையங்களும்
செயல்படுகின்றன. இவற்றில் 10,500 கிராம சுகாதார செவிலியர்கள், 1,400 பகுதி
சுகாதார செவிலியர்கள், 380 சமுதாய நலச் செவிலியர்கள் பணியாற்றி வருகிறோம்.
கிராமப்புற செவிலியர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வு
வழங்க வேண்டும். காலியாக உள்ள 2,500 கிராம பணியிடங்களை உடனடியாக நிரப்ப
வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை வெளியாள்கள் கொண்டு நியமிப்பதை ரத்து
செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையங்களுக்குப் போதுமான மருந்துகள்,
பதிவேடுகள் வழங்க வேண்டும். மூடப்பட்ட 6 துணை செவிலியர் பயிற்சி மையங்களை
மீண்டும் திறக்க வேண்டும். மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை அந்தந்த
மாநிலத்தின் சூழலுக்கேற்ப அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்
குறித்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, பல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வரும் 27-இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.








