இப்பல்கலையில் ஆறு மாதங்களாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. கவர்னர் பிரதிநிதியான பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் துணைவேந்தர் தேர்வுக் குழு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டம் நான்கு முறை தள்ளிவைக்கப்பட்டதை குறிப்பிடலாம். கடந்த ஆறு மாதங்களில், ஒரு சிண்டிகேட் கூட்டம்
மட்டுமே நடந்துள்ளது. அதற்கு பின், அறிவிக்கப்பட்ட கூட்டங்கள், செப்., 18, செப்., 22, அக்., 12, அக்., 20 என நான்கு முறை தேதி குறிப்பிட்டு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கு காரணம், செயலருக்கு அடுத்தடுத்து வரும் பணிப்பளு தான். எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க முடியாமல் பல்கலை செயல்பாடுகள் முடங்கும் நிலைஉள்ளது.
ஆராய்ச்சி பிரிவு 'அதோ கதி': துணைவேந்தர் இல்லாததால் பிஎச்.டி., ஆராய்ச்சி பிரிவு முற்றிலும் முடிங்கியுள்ளது. பொது வாய்மொழித் தேர்வு (வைவா) தேதி கேட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். துணைவேந்தர் இல்லாததால் யாரிடம் ஆய்வறிக்கை (தீசிஸ்) தாக்கல் செய்ய வேண்டும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இதுதவிர 'கைடுஷிப்'பிற்கு விண்ணப்பித்து நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் முடிவு தெரியாமல் காத்திருக்கின்றனர். பிஎச்.டி., முடித்து விட்டு சான்றிதழ் பெற முடியாமல் பலர் அலைந்து தவிக்கின்றனர்.
பேராசிரியர்கள் கூறியதாவது: துணைவேந்தர் இல்லாத நேரத்தில் அதற்கான முக்கியமான ஒரு சில பொறுப்புக்களை கன்வீனர் கமிட்டியிடம் செயலர் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அவரும் பல்கலை செயல்பாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுவரை ஒரு சிண்டிகேட் கூட்டம் தான் நடந்துள்ளது. ஆராய்ச்சி பிரிவு பிரச்னைகள், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நேரடி மாணவர் சேர்க்கை முறை சர்ச்சை, பணி நியமனம் மற்றும் பணிமாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.புதிய படிப்புகள் குறித்தும், அக்டோபரில் நடக்கும் பட்டமளிப்பு விழா குறித்தும் முடிவு எடுக்காத நிலையுள்ளது. இந்தாண்டு பல்கலை பொன் விழா ஆண்டு. இதற்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை, என்றனர்.








