தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக காலியாக உள்ள அரசு சித்த மருத்துவ
மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக்கோரி துறை ஆணையரிடம் புதன்கிழமை முறையீடு
செய்யப்பட்டது.ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கைக்கு முறையாக பதில்
அளிக்கவில்லை என்றும், மேற்கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்
எனவும் மருந்தாளுநர்கள் அப்போது தெரிவித்தனர். தமிழகத்தில் சித்த
மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவத்தில் 130-க்கும் மேற்பட்ட
மருந்தாளுநர் பணியிடங்கள் 2007-ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ளன.
இந்தத்
துறை மருந்தாளுநர்களுக்கு அலோபதி முறையில் உள்ளது போன்று மருந்து ஆய்வாளர்
பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மருந்து ஆய்வாளரை
நியமிப்பதன் மூலம் போலி மருந்துகள் பயன்பாடு, தரமற்ற மருந்துகளை தயாரித்தல்
உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் இந்திய முறை
மருத்துவத்தில் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு மட்டுமே உள்ளது.
மருந்தாளுநர்களுக்கான பட்டப் படிப்பையும் தொடங்க வேண்டும்.
நிர்வாகக் காரணத்தினால் இடமாறுதல் என்ற கொள்கையில் இடமாறுதல் அளிக்கக் கூடாது.
முறையாக
இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள்
அடங்கிய மனுவை இந்திய முறை- ஹோமியோபதி இயக்கக ஆணையரிடம் தமிழ்நாடு
இந்தியமுறை மருந்தாளுநர் சங்கத்தினர் புதன்கிழமை வழங்கினர்.
இது
குறித்து சங்கத்தின் இணைச் செயலாளர் பாலகுமார் கூறுகையில், சுமார் 80 பேர்
இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆணையரிடத்தில் வழங்கினோம்.
ஆனால் கோரிக்கைகளுக்கு முறையான பதில் எதையும் அளிக்கவில்லை.
எனவே சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என்றார் அவர்.