குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சராசரியாக அக்டோபர் மாதம் 20-ந்தேதி தொடங்கும். கடந்த வருடம் 20-ந்தேதிக்கு முன்பே தொடங்கி விட்டது.
அவர் அறிவித்தபடி தென் கிழக்கு வங்கக்கடலில், இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அரபிக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
நான் ஏற்கனவே அறிவித்தபடி தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.
உள் மாவட்டங்களிலும் அநேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை நாளை(புதன்கிழமை) தொடங்க உள்ளது. இப்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலும், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப் பாளையத்திலும் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், திருச்சி மாவட்டம் சமயபுரம், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருச்சி நகர்புறம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அந்தமான், லட்சத்தீவு பகுதியில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அப்போது பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி வரை 4 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள கடல் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச்செல்லவேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.








