மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்
என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள்,
உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தலைமைச்
செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்
பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.
1992-இல்
மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு இணையாக, தமிழக தலைமைச் செயலகத்தில்
பணியாற்றும் உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை ஊதியமானது ரூ.1,640-ஆக
உயர்த்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு உதவியாளர்களுக்கு அடிப்படை
ஊதியத்தை உயர்த்திய நிலையில், தமிழகத்திலும் அடிப்படை ஊதியமானது
ரூ.6,500-ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்போது மத்திய தலைமைச்
செயலக உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.12,540-ஆகவும், தர ஊதியம்
ரூ.4,600-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக
வழங்கப்படுகிறது. இதேபோன்ற அளவில், தலைமைச் செயலக உதவிப் பிரிவு
அலுவலர்களுக்கும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.