தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 37 ஆயிரத்து 141 உள்ளன. இந்த பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளிகளில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 825 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
வேலை நிறுத்தம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு
பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) திறந்து இருக்கும். வழக்கம்போல பள்ளிக்கூடங்கள் அனைத்தும் செயல்படும். ஜாக்டோ அமைப்பினர் தவிர 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்கு வருவார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார்கள். அதன் மூலம் கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அந்தந்த பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் துணையுடன் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறந்து இருக்கும். ஆசிரியர்கள் தைரியமாக பள்ளிக்கூடங்களுக்கு வரலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
மேலும் அவர் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தடங்கல் இன்றி பள்ளிகள்
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டம் என்று அறிவித்து இருப்பதால் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று( வியாழக்கிழமை) எவ்வித தடங்கலுமின்றி செயல்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சத்துணவு அமைப்பாளர்கள்
இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஒரு சில சங்கங்கள் மட்டுமே கலந்துகொள்வதால், பள்ளிகளுக்கு வருகை தரும் பிற சங்கங்களைச் சார்ந்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தித் தர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏதேனும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நிலையில், அப்பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடிப் பணியாளர் ஆகியோரைப் பயன்படுத்தி பள்ளிகள் செயல்படுவதை உறுதிப்படுத்திட வேண்டும். கல்வித்துறையைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரைக் கொண்டுஅனைத்துப் பள்ளிகளும் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இரு ஆசிரியர் பள்ளிகள்
தொடக்கப் பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் இருவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக இருப்பின், பள்ளியின் வகுப்பறை சாவிகளை இன்றே சத்துணவுஅமைப்பாளர்/ அங்கன்வாடிப் பணியாளரிடம் ஒப்படைத்து பள்ளி நடைபெறுவதை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிகள்திறக்கப்படாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








