தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் நேற்று கூறியதாவது:-
சம்பள உயர்வு
எங்களுக்கு 15 அம்ச கோரிக்கைகள் உள்ளன. அந்த கோரிக்கைகளில் முக்கியம் உள்ளவை வருமாறு:-
* 6-வது ஊதிய குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியம் போல சமமாக வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்படாமல் இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியத்துடன் கூடிய சம்பளத்தை வழங்குதல்.
அகவிலைப்படி
* அகவிலைப்படி 100 சதவீதத்தை கடந்துவிட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து கொடுத்தல்.
* 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசு தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல்.
* ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2 கட்டங்களாக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தினோம். 3-வது போராட்டமாக சென்னையில் மாநிலம் தழுவிய அளவில் நடத்தினோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் அறிவித்தோம்.
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
அதன்படி இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். அதனால் பள்ளிகள் அனைத்தும் செயல்படாது.
இவ்வாறு ஜாக்டோ மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் தெரிவித்தார்.








