சமூக மாற்றம் பெற மாணவர்கள் ஒவ்வொருவரும் அப்துல் கலாமாக உருவாக வேண்டும் என மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் கூறினார்.சென்னையில்
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின்
"வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம்' என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியது:-அப்துல்
கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நூல் வெளியிடப்படுகிறது. இந்தியாவின்
தென் கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அவர், இந்தியாவின் வட கிழக்கில்
இமயமலை அடிவாரத்தில் உள்ள மேகலாயாவில் உயிரிழந்தார்.
அவர் நிறைவான
வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது உடலுக்கு இந்திய நாட்டின் பிரதமர் முதல்
சாதாரண குடிமகன் வரை பலரும் ராமேஸ்வரத்துக்கு நேரில் வந்து அஞ்சலி
செலுத்தினர்.இங்கு வெளியிட்ட புத்தகத்தில் "சுதந்திரம்' என்ற தலைப்பில் அவர் கூறும்போது, நமது நாட்டை கிரேக்கர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பல்வேறு நாட்டினர் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், நாம் எந்த நாட்டின் சுதந்திரத்தையும் பறிக்கவில்லை.
அதேநேரத்தில், நாம் பலவீனமானவர்களாக இருக்கக் கூடாது. வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்கிறார்.
இந்திய நாடு வளர்ச்சிப் பெற வேண்டும் என்றால், வலிமை பெற வேண்டும் என்றால் இங்குள்ள ஏழை மக்கள் கண்ணீர் விடக் கூடாது. மனிதர்களுக்கு சேவை செய்வது இறைவனுக்கு சேவை செய்வதைப் போன்றது என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
இங்குள்ள ஒவ்வொருவரும் அப்துல் கலாமாக உருவாகி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த நாட்டில் இருக்கும் ஏழ்மையை அகற்ற வேண்டும் என்றார்.
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனின் "காலத்தை வென்ற கலாம்' என்ற குறும்படமும் இந்த நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தஜி, கலாமின் சக விஞ்ஞானியும், அவருடன் இணைந்து இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதியவருமான ஒய்.எஸ். ராஜன், வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்தானந்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.







