பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு சென்னையில் 44 காசுகள் குறைந்தது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.
பெட்ரோல் விலை
பெட்ரோல், டீசல் விலைகளை பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய்
நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து விலை மாற்றப்படுகிறது.
கடைசியாக
அக்டோபர் 1–ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது. ஆனால்
டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்தது. பின்னர் 15–ந் தேதி மீண்டும்
டீசல் விலை 99 காசுகள் உயர்ந்தது. பெட்ரோல் விலையில் மாற்றம்
செய்யப்படவில்லை.
சென்னையில் 44 காசு குறைந்தது
ஒரு மாதத்துக்கு பின்னர் நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலை டெல்லியில்
லிட்டருக்கு 50 காசுகள் குறைக்கப்பட்டது. ஆனால் டீசல் விலையில் மாற்றம்
செய்யப்படவில்லை.
சென்னையை பொறுத்தவரை உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப
பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்தது. முக்கிய நகரங்களில்
பெட்ரோல் விலை விவரம் வருமாறு:–
நள்ளிரவு அமல்
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.20–ல் இருந்து 50
காசுகள் குறைந்து ரூ.60.70 ஆனது. சென்னையில் ரூ.61.46–ல் இருந்து 44
காசுகள் குறைந்து ரூ.61.02 ஆனது. கொல்கத்தாவில் ரூ.66.50–ல் இருந்து
ரூ.66.11 ஆகவும், மும்பையில் ரூ.68.25–ல் இருந்து ரூ.67.77 ஆகவும்
குறைந்தது.
டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.







